நகரப் பகுதியில் ஹெல்மெட் கட்டாயம் விதியை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை புதுச்சேரி காவல்துறை பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் அ.மு.சலீம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:புதுச்சேரி மாநிலத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று காவல்துறை கட்டாயப்படுத்துகிறது மீறினால் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டும்போது ஹெல்மெட் என்கிற தலைக்கவசம் அணிவதன் மூலம் விபத்து ஏற்பட்டால் உயிர் தப்பிப்பதற்கு வழிவகுக்கும் என்கின்ற கருத்தில் மாற்றுக்கருத்து இல்லை.
வேகமாக வாகனங்கள் ஓட்டும் போது ஹெல்மெட் அவசியமாகிறது.
ஆனால் புதுச்சேரி மாநகரத்தில் உள்ள சாலைகளில் ஏற்படுகின்ற கடுமையான போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து கொண்டுதான் செல்கின்றன என்பது நிதர்சன உண்மையாகும். குறிப்பாக 20 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல முடியவில்லை.
மேலும் 50 வயது, 60 வயது, 70 வயது உடைய ஏராளமானவர்கள் இரண்டு சக்கர வாகன உபயோகிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஹெல்மட் கட்டாயமாக்கப்படுவதால், அருகில் வரும் வாகனங்களில் ஒலி எழுப்பும் சத்தம் அவர்களுக்கு கேட்கவில்லை. இடது, வலது புறம் திரும்புவதிலும் சிரமப்படுகிறார்கள். இதனால் விபத்துக்குள்ளாகிறார்கள்.
ஆகவே... புதுச்சேரி காவல்துறை ஹெல்மெட் கட்டாய விதிகளை தளர்த்த வேண்டும். புதுச்சேரி மாநில எல்லைப் பகுதிகளில் குறிப்பாக, அரியாங்குப்பத்திலிருந்து கடலூர் சாலைக்கும், வில்லியனூரிலிருந்து விழுப்புரம் சாலைக்கும் காலாப்பட்டிலிருந்து ஈசிஆர் சாலைக்கும், அய்யன்குட்டி பாளையத்திலிருந்து வழுதாவூர் சாலைக்கும் ஹெல்மெட் போடுவது கட்டாயமாக்கலாம், மற்ற சாலைகளில் ஹெல்மெட் அணிவதை அவரவர் விருப்பத்திற்கு உட்படுத்தலாம்.
மேற்கண்ட கோரிக்கையை புதுச்சேரி காவல்துறை பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் அ.மு.சலீம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.