விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மாநில மாநாடு மூலம் அரசியலில் குதித்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்வதாக விமர்சிக்கப்பட்டது. அதற்கேற்றார் போல் தான் விஜயின் செயல்பாடுகளும் இருந்தது. இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடி வரும் மக்களை விஜய் சந்தித்து பேசுவார் என அறிவிக்கப்பட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையிடம் அனுமதி வாங்கப்பட்ட நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திட்டமிட்டபடி நேற்று விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்து பேசினார்.
சிறுவன் ராகுல் பேசிய வீடியோவை கண்டு மக்களை சந்திக்க வேண்டும் என தான் நினைத்ததாகவும், தனது முதல் கால அரசியல் பயணம் பரந்தூரில் இருந்து தொடங்க வேண்டும் என தான் நினைத்ததாகவும், அதற்காகவே இங்கு வந்து மக்களை சந்தித்துள்ளதாக பேசினார். மேலும் விவசாயிகளை காக்க வேண்டும் எனக் கூறிய திமுக தற்போது காக்க வேண்டாமா? என கேட்டதோடு ஆட்சியாளர்கள் ஏதோ ஒரு விஷயத்துக்காக தான் இங்கே விமான நிலையம் அமைக்க வேண்டும் என்கிறார்கள் என விமர்சித்தார். மத்திய அரசை விட மாநில அரசை விமர்சித்தே விஜயின் பேச்சு இருந்தது ஆளுங்கட்சியான திமுகவை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து விஜயின் பேச்சுக்கு திமுகவினர் சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைச்சர்கள், நடிகர் விஜயின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய் ஒன்றும் அண்ணா ஹசாரே போல ஓராண்டு உண்ணாவிரதம் இருக்கவில்லை எனக் கூறியுள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தங்களுக்கு மக்கள் பணி இருக்கிறது என பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை ஓட்டேரி பகுதியில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை மேயர் பிரியாவுடன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் விஜய் பரந்தூர் சென்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அன்னா ஹசாரே போன்று ஓராண்டு உண்ணாவிரதம் இருந்தாரு விஜய்? கடந்து சென்று விட்டது. நேற்றையை நிகழ்வு நேற்றோடு எல்லாம் முடிவடைந்து விட்டது. இன்றைய மக்கள் பணியை நாங்கள் சூரியன் உதிக்கும் முன்னர் ஆரம்பித்துள்ளோம். நடு இரவில் தான் மக்கள் பணி முடிந்து வீடு திரும்புவோம். இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலை” என்றார்.