தமிழகத்தில் குரூப் 1 மூலம் டிஎஸ்பிக்களாக பணியில் சேருகிறவர்கள் பதவி மூப்பு அடிப்படையில் எஸ்பிக்களாக பணியாற்றும்போது அவர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளில் ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்படும். ஒவ்வோர் ஆண்டும் மாநிலங்களுக்கு யுபிஎஸ்சி மூலம் தேர்வாகி ஐபிஎஸ் அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறவர்களைப் போல, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அதிகாரிகளுக்கும் ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கும்.
அதில் 2018ம் ஆண்டு முதல் தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்படாமல் இருந்தது. அதன்படி தகுதியானவர்களுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்குவதற்கான பட்டியலை தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு வழங்கியது. அந்தப் பட்டியலின் அடிப்படையில், ஒன்றிய அரசு கடந்த மாதம் 18ம் தேதி டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு வழங்கிய பட்டியலை ஆய்வு செய்தது. அதைத் தொடர்ந்து 25 அதிகாரிகளுக்கு தற்போது ஐபிஎஸ் அந்தஸ்து வழங்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
2018ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பட்டியலில் எஸ்பிக்கள் மணி, செல்வக்குமார், சுதாகர், செந்தில்குமார், முத்தரசி, பெரோஸ்கான் அப்துல்லா, சக்திவேல், நாகஜோதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 2019ம் ஆண்டு பட்டியலில் ராஜேந்திரன், விமலா, சுரேஷ்குமார் ஆகியோரும் 2020ம் ஆண்டு பட்டியலில் பாஸ்கரன், சண்முகப்பிரியா, ஜெயக்குமார், மயில்வாகனன், ஜெயலட்சுமியும், 2021ம் ஆண்டு பட்டியலில் சுந்தரவடிவேல், உமையாள், சரவணன், செந்தில்குமார், மகேந்திரன், சுப்புலட்சுமியும், 2022ம் ஆண்டு பட்டியலில் ராஜன், செல்வராஜ், ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அதில் ஈஸ்வரன், ராமகிருஷ்ணன், சுகுமாரன் ஆகியோருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்படவில்லை. ராமகிருஷ்ணன் ஓய்வு பெற்று விட்டார். சுகுமாரன், விருப்ப ஓய்வில் சென்று விட்டார். ஆனாலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டு முடித்துவைக்கப்பட்ட பின், ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டு, ஓய்வு பெற்றவர்களின் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.