ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய நபர்; 14 மாவோயிஸ்ட்களை என்கவுன்ட்டர் செய்த பாதுகாப்பு படை!
Vikatan January 22, 2025 03:48 PM
தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசுத் தொகை என்று அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய நபர் உட்பட 14 மாவோயிஸ்டுகளை மத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் என்கவுன்டரில் கொலைசெய்திருக்கின்றனர்.

முன்னதாக சத்தீஷ்கரின் கரியாபண்ட் மாவட்டத்தில் திங்களன்று மாவட்ட ரிசர்வ் காவலர்கள், மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), ஒடிசாவின் சிறப்பு நடவடிக்கை குழு (SOG) ஆகியவை என்கவுன்டர் நடவடிக்கையைத் தொடங்கியது. நேற்றுவரை நீடித்த இந்த என்கவுன்டரில், ரூ.1 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் சல்பதி உட்பட 14 சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் சல்பதி

கொல்லப்பட்ட சல்பதி ஆந்திரப் பிரதேசத்தின் சிண்டூரில் உள்ள மாடெம்பா பள்ளி பகுதியைச் சேர்ந்தவர். இவர் பிரதாப் ரெட்டி ராமச்சந்திர ரெட்டி, அப்பா ராவ், ஜெய் ராம், ராமு உள்ளிட்ட பெயர்களிலும் அழைக்கப்பட்டிருக்கிறார். போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, இவர் மாவோயிஸ்ட் மத்திய கமிட்டி உறுப்பினராக மட்டும் இருந்தது மட்டுல்லாமல், ஒடிசா மாநிலக் குழுவின் பொறுப்பாளராகச் செயல்பட்டிருப்பதாகவும், குறிப்பாக சத்தீஸ்கரின் மார்ஹ் பகுதியில் செயல்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த என்கவுன்டர் சம்பவம் குறித்து ஊடகத்திடம் பேசிய கரியாபண்ட் எஸ்பி நிகில் ரகேச்சா, ``தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் சல்பதி கொல்லப்பட்ட இந்த என்கவுன்டர், நாட்டிலேயே மிகப்பெரிய என்கவுன்டர்களில் ஒன்று. காரணம், பொதுவாக மத்திய குழு உறுப்பினர்கள் இயற்கை மரணம் அல்லது அரிதாகக் கைது செய்யப்படுவார்கள். எனவே, மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினரை என்கவுன்டர் செய்தது பெரிய சாதனை." என்று கூறினார்.

இந்த என்கவுன்டரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``நக்சலிசத்துக்கு மற்றொரு பலத்த அடி. மாவோயிஸ்ட் இல்லாத பாரதத்தை உருவாக்குவதில் நமது பாதுகாப்புப் படைகள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. நமது பாதுகாப்புப் படைகளின் கூட்டு முயற்சியால், நக்சலிசம் இன்று இறுதி மூச்சில் இருக்கிறது." என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

மேலும், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், பாதுகாப்புப் படையினர் 2026 மார்ச்சுக்குள் நாடு முழுவதும் நக்சலிசத்தை ஒழிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வாக்கை வலுப்படுத்தி, இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்றனர். எங்களின் இரட்டை இஞ்சின் அரசின் கீழ், 2026 மார்ச்சுக்குள் சத்தீஸ்கர் நக்சலிசத்திலிருந்து விடுபடுவது உறுதி." என்று தெரிவித்திருக்கிறார்.

மாவோயிஸ்ட்

கடந்த ஆண்டு டிசம்பரில் சத்தீஸ்கரில் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து, 260 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 1000-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதோடு, 870 மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.