ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி குத்துக்கல் தெருவை சேர்ந்தவர் முகமது சித்திக். இவர் பரமக்குடியில் புரோட்டா கடை நடத்தி வருகிறார். முகமது சித்திக் கடந்த இரண்டு ஆண்டுகளாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வருகிறார்.
இன்று (ஜன.22)திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ராமநாதபுரம் வந்துள்ளார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் படிக்கும் அவரது மகன் ரயிலில் ராமநாதபுரம் வந்துள்ளார்.
மகனை அழைத்து வர ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்ற முகமது சித்திக் ரயில் நிலைய நுழைவு வாயில் முன் வண்டியை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அவர் உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில் ஸ்கூட்டரில் இருந்து முதலில் கரும்புகை வெளி வந்துள்ளது.
அடுத்த சில நொடிகளில் ஸ்கூட்டர் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ டிரைவர்கள் அவசர அவசரமாக தங்கள் ஆட்டோக்களை அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து கொளுந்து விட்டு எரிந்த ஸ்கூட்டரால் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு இரு சக்கர வாகனத்திலும் தீ பரவியது. பெரிய சேதம் ஏதும் இல்லாத நிலையில், முகமது சித்திக்கின் ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து நாசமானது. சம்பவம் குறித்து முகமது சித்திக் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.