நடிகர் மோகன் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவரது பாடல்கள் தான். அவர் நடித்த பெரும்பாலான படங்களில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனதால் மைக் மோகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவரது நடிப்பில் கடந்த 1986-ல் வெளிவந்த திரைப்படம் தான் தென்றலே என்னைத் தொடு.. இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்து 80 -களில் பிறந்தவர்களின் கிரெஷாக விளங்கினார் நடிகை ஜெயஸ்ரீ.
பூர்வீக சினிமா குடும்பத்திலிருந்து வந்த ஜெய ஸ்ரீயின் பாட்டி பழம்பெரும் நடிகையும், பாடகியுமான எஸ்.ஜெயலட்சுமி ஆவார். மேலும் இவரது தாத்தாவான எஸ். பாலச்சந்தரும் இசை, தயாரிப்பு என சினிமாவில் அங்கம் வகித்தவர். குடும்பப் பாங்கான முகம், கலையான தோற்றம் என அப்படியே 80-களின் கனவுக் கன்னியாக ஜொலிக்க ஆரம்பித்தார் ஜெய ஸ்ரீ.
இன்னமும் தொலைக்காட்சியில் எவர்கிரீன் ஹிட் பாடலான தென்றல் வந்து என்னைத் தொடும்.. பாடல் ஒளிபரப்பானால் ஜெய ஸ்ரீ-யின் அழகுக்காகவே பார்ப்பவர்கள் நிறைய உண்டு. இப்படி முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்ததால் தொடர்ந்து மனிதனின் மறுப்பக்கம், விடிஞ்சா கல்யாணம், திருமதி ஒரு வெகுமதி, ஆனந்த், மணல்கயிறு 2 போன்ற படங்களில் நடித்தார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார் ஜெய ஸ்ரீ.
இப்படி 80-90 களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்த ஜெய ஸ்ரீ 2000-ம் ஆண்டிற்குப் பின்னர் திருமணம் முடித்து அமெரிக்காவில் செட்டில் ஆனார். இவரது குடும்ப நண்பர்தான் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். ஜெயஸ்ரீ-யிடம் பேசும் போது, இவரது குரலைக் கேட்டு தான் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகாவிற்கு டப்பிங் பேச வைத்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே கவிதாலயா படங்களில் டப்பிங் பேசியிருக்கிறார் ஜெய ஸ்ரீ. 80-களில் எப்படிப் பார்த்தமோ இன்றும் அதே பொலிவுடன் சுறுசுறுப்பாக ஐடி துறையில் மிகப்பெரிய பொறுப்பில் இயங்கி வருகிறார் நடிகை ஜெய ஸ்ரீ.