நடப்பு ரஞ்சிக் கோப்பைத் தொடரின் ஆறாவது சுற்றுப் போட்டிகள் நாளை முதல் தொடங்கவிருக்கிறது.
ரோஹித் சர்மா, ஜடேஜா,ஜெய்ஸ்வால், கில் என இந்திய அணியின் ஸ்டார்கள் ரஞ்சியில் களமிறங்க இருப்பதால், இந்தப் போட்டிகளின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. உள்ளூரில் நியூசிலாந்துக்கு எதிரான ஒயிட் வாஷ், பார்டர் கவாஸ்கர் டிராபி தோல்வி இவற்றுக்கெல்லாம் பிறகு பிசிசிஐ இந்திய அணியின் வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர், அணியின் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் ஆகியோருடன் தீவிரமாக கலந்து பேசிய பிறகு வீரர்களுக்கான 10 புதிய கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்ததாக தகவல்கள் வெளியானது.
பிசிசிஐஅதன்படி வீரர்களின் குடும்பத்தினர் அவர்களுடன் பயணிப்பதற்கெல்லாம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மிக முக்கியமாக இந்திய அணிக்கு ஆடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் ஆடுவதையும் உறுதி செய்ய வேண்டும். காயம் எதுவுமின்றி நலமாக இருக்கும்பட்சத்தில் தவிர்க்காமல் உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.
அதன்படிதான் இப்போது ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சூப்பர் ஸ்டார் வீரர்களே ரஞ்சிப் போட்டியில் களமிறங்க ஆயத்தமாகி வருகின்றனர். இருவருமே கடைசியாக 10-12 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் ரஞ்சிப் போட்டியில் ஆடியிருக்கின்றனர். இந்திய அணியில் அவர்களுக்கான இடம் உறுதியான பிறகு உள்ளுர் போட்டிகளில் ஆடுவதை முழுமையாக தவிர்த்து வந்தனர்.
ரஞ்சிக் கோப்பைஆனால், இப்போது அவர்களின் பார்ம் கடுமையாக அடி வாங்கியிருக்கிறது. கடந்த ஆண்டில் இருவருமே டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக சாதிக்கவில்லை. சொற்ப ரன்களையே அடித்திருந்தனர். பார்டர் கவாஸ்கர் தொடரிலும் தங்களின் விக்கெட்டை இலகுவாக தாரை வார்த்துவிட்டு சென்றனர். பிசிசிஐ கட்டாயப்படுத்தாவிட்டாலும் அவர்களே முன்வந்து உள்ளூர் போட்டிகளில் ஆடினால்தான் மீண்டும் பார்முக்கு வர முடியும் என்ற நிலையிலேயே இருந்தனர்.
ரோஹித் சர்மா கடந்த சில நாட்களாகவே மும்பை அணியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஜம்மு - காஷ்மீருக்கு எதிராக நாளை தொடங்கவிருக்கும் போட்டியிலும் அவர் களமிறங்கவிருக்கிறார். ஜெய்ஸ்வாலும் நாளையப் போட்டியில் மும்பைக்காக ஆடுகிறார். ரஹானே வழக்கம்போல மும்பை அணியின் கேப்டனாக செயல்படுவார்.
ரோஹித், கோலிபஞ்சாப் அணிக்காக கில்லும் சௌராஷ்ட்ரா அணிக்காக ஜடேஜாவும் களமிறங்குகின்றனர். சௌராஷ்ட்ராவுக்கு எதிராக டெல்லி நாளை மோதுகிறது. ஆனால், கோலி நாளையப் போட்டியில் டெல்லி அணிக்காக ஆடவில்லை. 30 ஆம் தேதி தொடங்கும் போட்டியில் இரயில்வேஸூக்கு எதிராக கோலி களமிறங்கவிருக்கிறார். கழுத்து வலி காரணமாக நாளைய போட்டியில் பங்கேற்கவில்லை என கோலி கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் முக்கிய ஸ்டார்கள் நாளை ரஞ்சி போட்டியில் களமிறங்குவதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் போட்டிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.!