Seeman: `தமிழ்நாட்டின் சாவர்க்கர் சீமான்..!' - திருமுருகன் காந்தி காட்டம்
Vikatan January 23, 2025 12:48 AM
கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கடலூரில் நடந்த ஒரு கட்சி கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், பெரியாரின் பெண்ணியம் சார்ந்த கருத்துகள் குறித்து காட்டமாக பேசியிருந்தார்.

இந்தப் பேச்சு பெரியாரிய ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. சீமானும் தொடர்ச்சியாக ஒவ்வொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் பெரியார் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதனைத் தொடர்ந்துதான் மே 17 இயக்கம், பெரியாரிய அமைப்புகள் ஒன்றிணைந்து சீமானின் வீடு இன்று (ஜன22) முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

சீமான்

இந்நிலையில் நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டை பெரியாரிய ஆதரவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முற்றுகையிட முயன்று கைதாகியிருக்கின்றனர். இந்த முற்றுகையை முன்னிட்டு சீமானின் வீட்டை சுற்றி நாம் தமிழர் தொண்டர்கள் உருட்டுக்கட்டையோடு நிற்கும் சம்பவமும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது

இதுகுறித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, "பெரியார் குறித்து அவதூறாக பத்திரிகையாளர் முன்புதான் பேசினார். அப்போது, அவர்கள் முன்பே பெரியார் தொடர்பான ஆதாரத்தைக் காட்ட வேண்டியதுதானே. டயலாக் பேசுவதற்கு மட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு. ஆனால் மன்னிப்பு கேட்பது மட்டும் நீதிமன்றத்தில். பொது வெளியில் கேட்டால் சீமான் பதில் சொல்லமாட்டாரா?

பதில் சொன்னால் என்ன பிரச்னை ஆகிவிடும். நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் ஆவணத்தை பொது வெளியில் வெளியிடட்டும். அது என்ன ரகசிய ஆவணமா. ரகசியமாக சீமானே தயாரித்து வைத்திருக்கிறாரா. நீங்கள்தான் வீழ்ந்து விடாத வீரன், மண்டியிடாத மானம் என்று டயலாக் பேசுகிறீர்கள். அப்போது தைரியமாக ஆவணத்தை பொது வெளியில் வெளியிடுங்கள்.

திருமுருகன் காந்தி

பெரியார் குறித்த அவதூறுக்கான எந்த ஆதாரமும் இல்லை. நாங்கள் அந்தப் புத்தகத்தை படித்துள்ளோம். சீமான் கூறும் ஆதாரம் எல்லாம் பாஜகவினர் எழுதிய புத்தகம். சீமானுக்கு புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லை. அண்ணாமலை 20 ஆயிரம் புத்தகம் என்று கதை விடுகிறார். சீமான் எந்த புத்தகமும் படிக்காமல் வாய்க்கு வந்ததை உளறுகிறார். இவர்களுக்கு எல்லாம் இதைப் பற்றி எந்தவொரு அக்கறையும் கிடையாது. தமிழ்நாட்டின் சாவர்க்கர் சீமான்" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.