கர்நாடகா லாரி விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு..!
Seithipunal Tamil January 23, 2025 03:48 AM

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹாவேரி மாவட்டம் குமுதா என்ற பகுதியில் நடந்து வரும் கோவில் திருவிழாவிற்காக தார்வார் பகுதியில் இருந்து ஒரு லாரியில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு 25 வியாபாரிகள் பயணம் செய்தனர். அதன் படி இந்த லாரி இன்று அதிகாலை யல்லாப்பூர் தாலுகா பகுதியில் உள்ள அர்பைல் காட் என்ற பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தானது.

இதில் லாரியில் பயணம் செய்த 10 காய்கறி வியாபாரிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற வியாபாரிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது:- "கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில் 10 வியாபாரிகள் பலியான சம்பவம் மிகுந்த கவலை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உள்ளூர் அரசு அதிகாரிகள் பாதிப்படைந்தவர்களுக்கு உதவிபுரிந்து வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு PMNRF-ல் இருந்து 2 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு  50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்" என்றுத் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.