பாட்டாளி செயல் வீரன் தமிழரசன் படுகொலை! பெரும் வேதனையில் டாக்டர் இராமதாஸ்!
Seithipunal Tamil January 23, 2025 06:48 AM

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த பாமகவை சேர்ந்த இளைஞர் தமிழரசன், கடந்த 16 ஆம் தேதி சமூக விரோத கும்பலால் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த  நிலையில், இன்று மாலை உயிரிழந்தார்.

இந்நிலையில், பாட்டாளி செயல் வீரன் தமிழரசன் மறைவு செய்தி அறிந்த பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "பாட்டாளித் தம்பி தமிழரசன் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இளம் வயதிலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். 

பா.ம.க. சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவரான அவர், அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதில் முன்னிலையில் இருந்தார். சமூகவிரோத சக்திகளை கண்டித்தது தான் அவரது உயிருக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. 

நெல்வாய் பகுதியில் திருமால்பூரைச் சேர்ந்த சட்டவிரோத கும்பல் செய்த அட்டூழியங்களைத் தட்டிக் கேட்டதற்காகத் தான் கஞ்சா வணிகம் செய்வதையும், சட்டவிரோத செயல்களைச் செய்வதையும் பிழைப்பாகக் கொண்ட கும்பல், அவரை கொடூரமான முறையில் பெட்ரோல் குண்டு வீசி, உயிருடன் எரித்து படுகொலை செய்திருக்கிறது.

பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வந்த தமிழரசன் எப்படியும் பிழைத்து விடுவார் என்று தான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், நம்மை அவர் ஏமாற்றி விட்டார். அவரது மறைவையும், பிரிவையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தமிழரசனை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.