அடுத்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தொடக்க நிகழ்ச்சியை அடுத்த மாதம் 16 மற்றும் 17-ம் தேதிகளில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
மேலும் ஐசிசி நிகழ்வுகளில் வழக்கமான நடைமுறையான தொடக்க விழாவில் அனைத்து அணி கேப்டன்களும் பங்கேற்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கேப்டன்கள் சந்திப்பு மற்றும் போட்டோசூட்டுக்காக இந்திய கேப்டன் ரோகித் பாகிஸ்தான் செல்லமாட்டாரெனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இந்திய அணியின் ஜெர்சியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் பெயரை அச்சிட பிசிசிஐ மறுத்ததாகத் தகவல் வெளியானது.
இதனையடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும், போட்டியை நடத்தும் நாட்டின் பெயரை ஜெர்சியில் பொறிக்க வேண்டும் என ஐசிசி தெளிவுபடுத்தியது.
கடந்த ஒருநாள் உலக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றபோது இந்தியாவின் பெயரைப் பாகிஸ்தான் அணியின் ஜெர்சியில் அச்சடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.