சினிமாவை பொறுத்தவரையில் ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் ரிலீசுக்கு வந்தால் மற்ற நடிகர்களின் திரைப்படம் பின்வாங்குவது வழக்கம் தான். இது சினிமாவில் காலம் காலமாக நடைபெற்று வருகின்றது. எடுத்துக்காட்டாக கடந்த பொங்கலையே கூறலாம். பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி திரைப்படம் வருகின்றது என்று சொன்னவுடன் பல திரைப்படங்கள் பின்வாங்கியது.
பின்னர் விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை என்று கூறியவுடன் பல திரைப்படங்கள் வரிசை கட்டி பொங்கல் பண்டிகைக்கு வெளியாக்கியதை நாம் பார்த்திருப்போம். தற்போது விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இதனால் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாக இருந்த நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படம் பிப்ரவரி 21ஆம் தேதிக்கு தள்ளிப் போயிருக்கின்றது.
அதேபோல் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படமும் பிப்ரவரி 21ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய நடிகர் அதாவது அஜித் போன்று தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவரின் திரைப்படம் வெளியாகின்றது என்பதால் இந்த இரண்டு திரைப்படங்களுமே வேறு தேதிக்கு மாற்றப்பட்டுவிட்டது.
ஆனால் தைரியமாக ஏப்ரல் 10ஆம் தேதி நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்துடன் நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படம் மோதுகின்றது. நடிகர் தனுஷ் இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை தானே இயக்கி ஹீரோவாக நடித்து வருகின்றார். இப்படம் 90 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் மீதம் இருக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இப்படம் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகின்றது என்று கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகின்றது. இந்த செய்தி வெளியானதற்கு பிறகு நிச்சயம் இட்லி கடை திரைப்படம் வேறு தேதிக்கு தள்ளிப் போகும் என்று பலரும் கூறி வந்தார்கள்.
ஆனால் நடிகர் தனுஷ் அதே ஏப்ரல் 10ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதற்கு திட்டவட்டமாக இருக்கின்றார். இது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் பிரபல சினிமா விமர்சனரான பிஸ்மி தனது பேட்டியில் தனுஷ் குறித்து உயர்வாக பேசி இருக்கின்றார். அதில் அஜித்தை பார்த்து தனுஷ் ஒருபோதும் பயப்படமாட்டார் என்று கூறி இருக்கின்றார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாவதால் இட்லி கடை திரைப்படம் நிச்சயம் தள்ளி போகாது. அஜித் திரைப்படத்துடன் தனது திரைப்படம் மோதினால் வசூல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும் தனுஷ் மோதுகிறார் என்றால் அப்படத்தின் மீது அவருக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கை இருக்கும். அதிலும் 2025 ஆம் ஆண்டு நடைபெற்று வருகின்றது.
இந்த காலகட்டத்தில் இட்லி கடை என்று தனது படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார் என்றால் நிச்சயம் அந்த படத்தில் ஏதோ ஒரு விஷயம் இருக்கின்றது. கன்டென்ட் ஸ்ட்ராங்காக இல்லை என்றால் அஜித் திரைப்படத்துடன் மோதுவதற்கு முன் வந்திருக்க மாட்டார். மேலும் நடிகர் தனுஷ் ஒரு திரைப்படத்திற்கு மற்றொரு படம் வித்தியாசத்தை கொடுக்க கூடிய ஒரு நபர்.
அப்படி இருக்கும் நிலையில் நிச்சயம் இட்லி கடை திரைப்படம் ஒரு வித்தியாசமான ஜானரில் இருக்கும். இந்த திரைப்படம் வெற்றி பெறும் என்கின்ற நம்பிக்கையில் படத்தை தைரியமாக இறக்கி இருக்கின்றார் தனுஷ். இந்த விஷயத்தில் அவரை நாம் பாராட்டியே ஆக வேண்டும்' என்று புகழ்ந்து பேசி இருக்கின்றார் பிஸ்மி.