இந்தியாவில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.இதன் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்க உள்ளது. 2 வது போட்டி ஜனவரி 25ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், போட்டியைக் காண வரும் ரசிகர்களின் வசதிக்காக பயணத்தை எளிதாக்கும் வகையில், பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இரவு 9.50க்கு புறப்படும் ரயில் 10 மணிக்கும், இரவு 10.20க்கு புறப்படும் ரயில் 10.30 மணிக்கும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் சேப்பாக்கத்தில் 10 நிமிடம் நிற்கும் (10.27 PM- 10.37 PM) என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஜனவரி 25ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2 வது டி20 போட்டியைக் காண வரும் ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது. போட்டிக்கான டிக்கெட்டை மட்டும் காண்பித்து பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.