யாரு மேல தப்பு..? இளையராஜா கேட்ட ஒரு கேள்வியால் உருவான சூப்பர் ஹிட் பாடல்..
Tamil Minutes January 22, 2025 08:48 PM

தமிழ் சினிமாவில் அத்திபூத்தாற்போல அவ்வப்போது சில படங்கள் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் பெருமை சேர்க்கும் படமாக அமையும். கடந்த வருடம் எப்படி லப்பர் பந்து திரைப்படம் வெளியாகி விமர்சனங்களால் மாபெரும் வெற்றி பெற்றதோ அதேபோல் கடந்த 2002-ல் பொங்கல் தினத்தன்று வெளியாகி விமர்சனங்களால் பெரும் வெற்றி பெற்ற படம் தான் அழகி. ஒளிப்பதிவாளராக இருந்த தங்கர்பச்சான் இயக்குநராக அவதாரம் எடுத்தார். சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த 96 படத்தின் ஓல்டு வெர்ஷன் என்று அழகியைச் சொல்லலாம்.

தங்கர்பச்சான் எழுதிய சிறுகதை ஒன்றை அப்படியே திரைப்படமாக மெருகேற்றினார். நடிகர் பார்த்திபனுக்கு பெரும் வெற்றி பெற்ற படம் இது. எல்லாவற்றையும் தாண்டி படத்தின் மற்றொரு ஹீரோ என்றால் அது இளையராஜா தான். எத்தனையோ படங்கள் இளையராஜா இசையால் சூப்பர் ஹிட் ஆனது. அந்த வரிசையில் அமைந்ததுதான் அழகியும். சிறந்த கதை, கதாபாத்திரத் தேர்வு, ஒளிப்பதிவு, இசை என அனைத்திலும் ஸ்கோர் செய்தது அழகி.

இப்படத்தில் இளையராஜாதான் பாட்டெழுத வேண்டும் என இயக்குநர் தங்கர் பச்சான் அவரிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஆனால் இளையராஜாவோ நாமே எழுதிவிட்டால் பாடலாசிரியர்கள் எதற்கு என்று கேட்க, தங்கர்பச்சான் நீங்கள் கிராமத்திலிருந்து வந்தவர், கதையின் உயிரோட்டம் தெரியும் எனவே நீங்களே எழுதுங்கள் என்று மீண்டும் அடம்பிடிக்க இப்படத்தில் 3 பாடல்கள் எழுதியிருக்கிறார் இளையராஜா. ஒளியிலே பிறந்தது தேவதையா…, பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி…, உன் குத்தமா என்குத்தமா போன்ற பாடல்களை இளையராஜா எழுத மற்ற பாடல்களை இதர கவிஞர்கள் எழுதினர்.

இப்படத்தில் இடம்பெற்ற உன்குத்தமா பாடல் தான் படத்திற்கே திருப்புமுனை. தனலட்சுமியாக வாழ்ந்த நந்திதாதாஸ் கஷ்டப்படும் சூழ்நிலையில் அவரை சண்முகமான பார்த்திபன் சந்திக்கும் அந்தக் காட்சிக்கு முதலில் என்ன எழுதுவது என்றே தெரியவில்லையாம். பின்னர் சில மணி நேரங்கள் கழித்து இளையராஜா தங்கர்பச்சானை அழைத்து மீண்டும் காட்சியைக் கேட்டிருக்கிறார்.

இக்காட்சியில் யார்மேல் தப்பு உள்ளது என்று கேட்க, தங்கர்பச்சானோ யார்மேலும் தப்பு இல்லை. என்று கூற, உடனே இளையாராஜா உன் குத்தமா.. என் குத்தமா.. யாரை நானும் குத்தம் சொல்ல என்று எழுதி சில மணிநேரங்களில் பாடல் பதிவினை முடித்துள்ளார்கள். மேலும் இப்பாடலையும் இளையராஜாவே பாடியிருப்பார்.

அழகி திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதினையும், மேலும் சிறந்த பின்னனிப் பாடகிக்கான தேசியி விருதினையும் சாதனா சர்கம்-க்கு பெற்றுக் கொடுத்தது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.