பிரபல மலையாள நடிகர் விநாயகன் மீண்டும் குடிபோதையில் அரைக்குறை ஆடையில் தனது வீட்டின் பால்கனியில் நின்றபடி ஆபாச வார்த்தைகளைப் பேசி சர்ச்சைக்குள் சிக்கியுள்ளது மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் நடிகர் விநாயகனுக்கு நடிகர் சங்கம் தடை விதிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிறந்த நடிப்புக்காக மாநில அரசின் விருதுகளைப் பெற்றுள்ள நடிகர் விநாயகன், நடிகர் ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியுடன் சண்டையிட்ட சம்பவத்தில் காவலர்களிடம் ரகளை செய்ததற்காக நடிகர் விநாயகன் கைது செய்யப்பட்டிருந்தார். அது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் அதன் பின்னர் கோவாவில் தேநீர் கடைக்கு முன் குடித்துவிட்டு, தேநீர் கடை ஊழியர்களைத் திட்டி ஆவேசத்தை வெளிப்படுத்தியதும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில் போதையில் தன் வீட்டின் பால்கனியில் நின்றபடி சாலையில் செல்பவர்ர்களை நடிகர் விநாயகன் தகாத வார்த்தையால் திட்டிக் கொண்டிருந்ததை எதிர் வீட்டிலிருந்தவர்கள் விடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, மீண்டும் விநாயகன் சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில், " ஒரு நபராகவும், நடிகராகவும் நிறைய விஷயங்களைக் கையாள வேண்டும். என்னால் அது முடியாது. என் எதிர்தரப்பினரிடமும் பொதுமக்களிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்" என்று நடிகர் விநாயகன் தன் முகநூலில் பதிவில் வருத்தம் தெரிவித்துள்ளார்.