திருமண வரமளிக்கும் ஸ்ரீலக்ஷ்மி நாராயண ஹோமம் பெங்களூரு ஸ்ரீகைலாச வைகுந்த க்ஷேத்ரத்தில் கடந்த 7-12-2024 சனிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் நடைபெற்றது.
ஆரம்பத்தில் கலச பூஜையும் விஷ்ணு சஹஸ்ரநாமமும் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சங்கல்பம் செய்துகொண்டு வரமும் அருளும் பெற்றார்கள்.
ஸ்ரீலக்ஷ்மி நாராயண ஹோமம்பெங்களூருவின் மிகப்பிரமாண்டமான ஆலயமாகவும் பிரபலமான பரிகாரத் தலமாகவும் விளங்குவது ராஜாஜி நகர் ஸ்ரீகைலாச வைகுந்த மஹாக்ஷேத்ரம். இங்கு வேறெங்கும் இல்லாத வகையில் 22 அடி நீளமான ஸ்ரீரங்கநாதர் பிரமாண்டமாக வீற்றிருக்கிறார். அதோடு இந்த ஆலயத்தில் ஈசன், திரிபுரசுந்தரி, முருகன், கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர், நவகிரகங்கள் உள்ளிட்ட சகல கடவுள்களின் சந்நிதிகளும் அமைந்துள்ளன. இதனாலேயே இங்கு எப்போதும் திருவிழாக்கள் நடைபெற்றபடியே இருப்பது வழக்கம்.
ஸ்ரீலக்ஷ்மி நாராயண ஹோமம்மேலும் இங்கு வந்து வணங்கினால் வாழ்வின் சகல தேவைகளையும் பெறலாம் என்பது நம்பிக்கை. குறிப்பாக இது கர்நாடகாவின் திருமண வரமருளும் பரிகாரத்தலமாக விளங்கி வருகிறது. இல்லறம் சிறக்கவும் பிள்ளைப்பேறு உண்டாகவும் சிறந்த பரிகாரத் தலமாக இது சிறப்பு பெற்று வருகிறது. இதனால் இங்கு உங்கள் சக்தி விகடன் திருமண வரம் அருளும் ஸ்ரீலட்சுமி நாராயண ஹோமம் நடத்த விரும்பியது. இதனால் ஆலய நிர்வாகத்தோடு இணைந்து ஜி.ஆர்.டி தங்கநகை மாளிகை, ஆர்.எம்.கே.வி திருமணச் சேலைகள் மற்றும் சைக்கிள் ப்ராண்ட் அகர்பத்திகள் நிறுவனமும் இணைந்து இந்த மங்கல ஹோமத்தை நடத்திக் கொடுத்தது.
பிருகு முனிவரின் சோதனையால் மனம் வெகுண்ட திருமகள் மகாவிஷ்ணுவை விட்டு நீங்கி பூமிக்கு வந்தார். பிறகு சினம் தணிந்த பிறகு மீண்டும் திருமாலை அடைய எண்ணி பல்வேறு இடங்களில் பாரதம் எங்கும் தவம் இயற்றினாள். தேவகுரு பிரகஸ்பதியின் வழிகாட்டலின்படி, தாயார் ஸ்ரீலட்சுமி இந்த ஸ்ரீலக்ஷ்மி நாராயண ஹோமம் செய்து பெருமாளை வேண்டினர்.
ஸ்ரீலக்ஷ்மி நாராயண ஹோமம்அதன்படி மனம் கனிந்த ஸ்ரீவிஷ்ணு, திருமகளைத் தனது மார்பில் நிரந்தரமாக ஏந்திக் கொண்டார் என்கிறது புராணம். இதனால் தேவருலகம் இழந்திருந்த செல்வங்களும் மீண்டும் கிடைத்தனவாம். பிரிந்திருந்த திருமால்-திருமகளை இணைத்து வைத்ததும், இழந்த செல்வங்களை மீட்டுக் கொடுத்ததுமான சிறப்புக்குரிய இந்த ஸ்ரீலக்ஷ்மி நாராயண ஹோமம் கடந்த டிசம்பர் 7-ம் தேதி இனிதே சங்கல்ப பூஜையோடு மதியம் 1 மணி வரை நடைபெற்றது.
பிரமாண்டமான ஹோமத்தில் விஷேசமான ஆகுதிப் பொருள்கள் இடப்பட்டு, வேத விற்பன்னர்களால் விசேஷமாக நடத்தப்பட்டது. ஹோமத்தின் இறுதியில் அறுசுவை உணவு தலை வாழை இடப்பட்டு பரிமாறப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பான பிரசாதங்களும் அளிக்கப்பட்டன.
கோயில் நிர்வாகி திரு. ஹரிஷ் தலைமையில் இந்த ஹோம விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பெங்களூரு தமிழ் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் முத்துமணி, எழுத்தாளர் நித்யகல்யாணி போன்றோர் முன்நின்று நடத்திக் கொடுத்தனர். பலரும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு முழு திருப்தியும், தங்கள் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையையும் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்கள்.
ஜி.ஆர்.டி தங்கநகை மாளிகை, ஆர்.எம்.கே.வி திருமணச் சேலைகள் மற்றும் சைக்கிள் ப்ராண்ட் அகர்பத்திகள் நிறுவன நிர்வாகத்தினர் இந்த ஸ்ரீலட்சுமி நாராயண ஹோமத்துக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பரிசுகளையும் வழங்கினார்கள். நல்லவை யாவும் விகடன் வாசகர்களால் சிறப்பாகவே நடைபெறும் என்பதற்கு இந்த ஹோமமும் ஒரு சாட்சியாகவே அமைந்தது.