ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்.. சிறப்பு ஏற்பாடுகளை செய்த பிர்லா கோளரங்கம்..!
சூரிய குடும்பத்தில் உள்ள ஆறு கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றும் அதிசயம் நிகழ இருப்பதை அடுத்து, இதனை பார்வையிட பிர்லா கோளரங்கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
பொதுவாக வானில் மூன்று அல்லது நான்கு கோள்கள் மட்டுமே நேர்கோட்டில் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படும். ஆனால் இப்போது தான் ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து வரும் அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளது.
வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படவுள்ள நிலையில், இதை காண்பதற்காக நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் ஜனவரி 25 ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை தொலைநோக்கி மூலம் பொதுமக்கள் இந்த அதிசய நிகழ்வை கண்டு களிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு அனைவருக்கும் கண்ணுக்கு விருந்தாக அமையும் எனவும், இதே போன்ற ஆறு கோள்களின் அணிவகுப்பு மீண்டும் பிப்ரவரி 28 மற்றும் ஆகஸ்ட் 29 ஆகிய நாட்களிலும் நடைபெறும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Siva