பகீர் வீடியோ... சுற்றுலாப் பயணிகள் வீசிசென்ற மது பாட்டிலை விழுங்க முயற்சி செய்யும் குட்டி யானை!
Dinamaalai January 22, 2025 06:48 PM

 நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் ஏராளம். இந்த  வனப்பகுதியில் ஏராளமான யானை, சிறுத்தை, கரடி, மான், புலி வசித்து வருகிறது. இந்த வனவிலங்குகளைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் முதுமலைக்கு வந்து செல்கின்றனர்.  சுற்றுலாப் பயணிகள் வரும் போது  மீதமான உணவுப் பொருட்கள், தின்பண்டங்கள் மற்றும் மதுபான பாட்டில்கள் ஆங்காங்கே வீசப்படுகின்றன.  
இதனால், வன விலங்குகள் பெரும் ஆபத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  சாலையோரம் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பாட்டில்களை வனத்துறையினர் அப்புறப்படுத்துகின்றனர்.  வனப்பகுதிகளுக்குள் சுற்றுலாப் பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்களை வீசி செல்வதால் அதைச் சாப்பிடும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.


 இந்நிலையில், முதுமலை வனப்பகுதியில் தாய் யானையுடன் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த குட்டி யானை ஒன்று அதன் தும்பிக்கையால் தரையிலிருந்த புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது தாய் யானையுடன் மற்றொரு யானை மரக்கிளைகளையும் புற்களையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அதே நேரத்தில், குட்டி யானை புற்களுக்கு இடையே இருந்த மது பாட்டிலைத் தும்பிக்கையால் எடுத்து வாயில் வைத்துச் சாப்பிட முயற்சி செய்கிறது. இது குறித்த வீடியோ  சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வனப்பகுதியில் வனவிலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் சுற்றுலாப் பயணிகள் வீசி செல்லும் பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்களை முழுமையாக அகற்ற வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்  சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் பிரதான சாலைகளில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்களை வீசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 
ஏற்கனவே, நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தில் அனுமதியின்றி செயல்பட்ட பத்துக்கும் மேற்பட்ட சொகுசு விடுதிகளுக்குச் சீல் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இது குறித்த  வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.