பெங்களூருவில் அட்டூழியம்.! கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தமிழக பெண்..!
Newstm Tamil January 22, 2025 06:48 PM

தமிழகத்தின் கிருஷ்ணகிரி பேரிகை அருகே சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 37 வயது பெண், கடந்த 19ம் தேதி இரவு கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூருக்கு தமிழக அரசு பஸ்சில் வந்தார். டவுன்ஹால் பஸ் நிலையத்தில் இறங்கியவர், அங்கிருந்து, எலஹங்காவில் வசிக்கும் சகோதரர் வீட்டிற்கு செல்வதற்கு பி.எம்.டி.சி., பஸ்சுக்காக இரவு 11:30 மணிக்கு காத்திருந்தார். அப்போது அங்கு இரு ஆண்கள் வந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக தெரிகிறது. அவர்களிடம் எலஹங்கா செல்லும் பஸ் எங்கு வரும் என்று தமிழக பெண் கேட்டார்.

பஸ் வரும் இடத்திற்கு அழைத்து செல்வதாக கூறி, அப்பெண்ணை இருவரும் அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு பெண்ணை இழுத்துச் சென்று இருவரும், அவரை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின், அப்பெண் அணிந்திருந்த தங்க சங்கிலி உள்ளிட்ட நகைகளை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், எஸ்.ஜே.பார்க் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

சம்பவம் நடந்த இடம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரித்த போலீசார், கே.ஆர்.மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் கணேஷ், 27, சரவணன், 35 ஆகியோரை நேற்று கைது செய்தனர்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.