இது தொடர்பாக கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''காமாட்சிபுரி ஆதீன ஆதி குரு முதல்வர் சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் நல்லாசியுடன், ஆதீனத்தில் சமூக, சமய பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சக்தி வழிபாட்டினை முழு முதல் கடவுளாகக் கொண்டு கடந்த அரை நூற்றாண்டு காலமாக உலகம் முழுவதும் ஆன்மீகப் பணியினை காமாட்சிபுரி ஆதீனம் செய்து வருகிறது.
கோவை காமாட்சிபுரி ஆதீனம், 51 சக்தி பீடம் மகாசக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அன்னையின் 44-ம் ஆண்டு திருக்கல்யாண மகா உற்சவம், குண்டம் பெரும் திருவிழா இன்று ஜனவரி 22-ம் தேதி காலை விநாயகர் வேள்வி, 108 விநாயகர் பூஜை, கோமாதா பூஜை ஆகியவைகளுடன் தொடங்குகிறது. தொடர்ந்து தினமும் மூன்று நேரமும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற உள்ளன. வரும் 25-ம் மாலை மகாலட்சுமி வேள்வி, 2-ம் குரு மகா சன்னிதானம் அழைப்பு, அம்மன் அழைப்பு, ஆகிய நிகழ்வுகளுடன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.