விஜய் டிவியில் கடந்தாண்டு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவு பெற்றது.
முதல் நாள் பதினெட்டு பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் 6 பேர் என மொத்தம் 24 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்ச்சியில் முத்துக்குமரன் டைட்டில் வென்றார்.
முன்னதாக ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் ரசிகர்கள் ஆதரவை இழந்த போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து எவிக்ட் ஆகி வெளியேறினர்.
நிகழ்ச்சியைப் பார்த்து வரும் ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருக்கும் போட்டியாளராக இருந்ததால் முத்துக்குமரனுக்கு டைட்டில் கிடைத்தது.
எவிக்டான ஜாக்குலின்; வைரலான சிரிப்பலை:
இந்த நிலையில் மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் ஜாக்குலின் எவிக்ட் ஆன நிகழ்வு சமூக ஊடகங்களில் ரொம்பவே வைரலானது. காரணம், அந்த எவிக்ஷனின் போது சக போட்டியாளர்களான சத்யா ஜெஃப்ரி இருவரும் ஒருவருக்கொருவர் சிரித்துப் பேசியபடி அந்த வீட்டுக்குள் நடந்து கொண்ட விதம்தான்.
ஜாக்குலின்மற்ற போட்டியாளர்கள் அழுது கொண்டிருந்த ஜாக்குலினைத் தேற்றிக் கொண்டிருந்த வேளையில் இவர்கள் இருவரும் ‘என்னாமா நடிக்கறாங்க பா’ என அவர்களைக் கலாய்த்த அந்த காட்சிகளையும் பிக் பாஸ் உலகத்துக்குக் காட்டி விட்டார். இந்த வீடியோ கண்டு ஜாக்குலினின் ரசிகர்கள் உட்பட பலரும் சத்யா மற்றும் ஜெஃப்ரியைத் திட்டித் தீர்த்தனர்.
நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவின் போது இந்த சம்பவம் குறித்து விஜய் சேதுபதியுமே ஜாக்குலினிடம் பேச, அவரும் வருந்த, அவரிடம் சாரி கேட்டார் சத்யா.
இந்த நிலையில் சத்யாவைத் தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசினோம்.
சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு!
‘’சார், ஜாக்குலின் வெளியேறியதற்காக நானோ ஜெஃப்ரியோ சந்தோஷப்படல. இதை நான் ஜாக்குலின் கிட்டயே தெளிவாச் சொல்லிட்டேன். அவங்களும் ஸ்போர்ட்டிவா எடுத்துகிட்டாங்க. நாங்க சிரிச்சதை தப்பா எடுத்துக்கிட்டவங்களுக்காக வேணும்னா திரும்ப ஒருவாட்டி கூடச் சொல்றேன்.
பிக் பாஸ் ஒரு ஷோ சார். உள்ள போற எல்லாருக்குமே டைட்டில் வாங்கணும்கிற எண்ணம்தான் இருக்கும். டைட்டில் ஒரேயொருத்தருக்குதான் தர்றாங்க. அதனால குரூப் சேர்ந்து விளையாடறதெல்லாம் அங்க ஒர்க் அவுட் ஆகாது. இது நிகழ்ச்சி பார்க்கிற எல்லாருக்கும் நல்லா புரியும். இப்படியிருக்கிறப்ப ஒருத்தர் வெளியேறுகிற போது இன்னொருத்தர் வருத்தப்படறாங்க, அதுவும் உருண்டு புரண்டு அழாத குறையா ஃபீல் பண்றாங்கன்னா யாராச்சும் நம்புவாங்களா? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு!
Bigg Boss Sathyaசிலருடைய அந்த மாதிரியான செய்கைகள் எங்களுக்கு ரொம்பவே செயற்கையா ஏன் நடிப்பாகவே தெரிஞ்சது. அதனால அதைத்தான் கலாய்ச்சோம்.
யார் யார் அப்படி நடந்தாங்கன்னெல்லாம் நீங்க என்கிட்டக் கேக்கக் கூடாது. கேட்டீங்கன்னா அதைச் சொல்லி அதுக்குப் பிறகு விளக்கம் கொடுத்திட்டிருக்கணும். அந்த டீடெய்ல் எல்லாம் மக்களுக்குத் தெரியும்’’ என்றவரிடம்,
‘பிக்பாஸ் நாம செய்கிற எல்லாத்தையும் காட்டிடுவார்னு உங்களுக்கு அந்த நேரத்துல ஞாபகத்துல இல்லையா’ எனக் கேட்டோம்.
‘’சுத்தி கேமரா இருக்குங்கிறது யாருக்குமே 24 மணி நேரமும் ஞாபகத்துல இருக்காது. அதுவும் போக நானும் ஜெஃப்ரியும் நடந்துகிட்டது, யாரையும் இன்சல்ட் பண்ணணும்கிற நோக்கத்துல இல்லையே! அந்த வீட்டின் விதிமுறைகளை மீறி போட்டியாளர்கள் யாராச்சும் செயல்பட்டாங்கன்னா பிக்பாஸே அதுவும் ஆன் தி ஸ்பாட்லயே கண்டிச்சிடுவார். நாங்க பண்ணினதை அவர் உங்களுக்குக் காட்டியிருக்கார்னா அவர் அதைத் தவறான விஷயமா எடுத்துக்கலன்னு கூட நினைச்சுக்கலாம் இல்லையா" என்கிறார்.