தனது மனைவிக்கு துணைத் தலைவர் பதவியை விட்டு தராததால், ஆத்திரத்தில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து 2 பேரைக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் 3 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே இருகூர் ஊராட்சி சுப்பையாபாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (50). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (35), செந்தில்குமார் (42), தூய்மைப் பணியாளர் சரவணன் (44) ஆகியோருடன் சேர்ந்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி இருக்கூர் ஊராட்சி அலுவலகம் அருகே மது அருந்தியுள்ளார்.
பின்னர் அனைவரும் அவரவர்கள் வீட்டிற்கு திரும்பிய நிலையில், தியாகராஜன், செந்தில்குமார் ஆகிய இருவருக்கு மட்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஆசிட் கலந்த மதுவைக் குடித்ததால் தியாகராஜனும், செந்தில்குமாரும் உயிரிழந்தது தெரிய வந்தது.
கடந்த 2019ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், இருக்கூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவியை தனது மனைவிக்கு விட்டு தராததால் செந்தில்குமாருக்கு ஆசிட் கலந்த மதுவை கொடுத்து ஆறுமுகம் கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஆறுமுகத்தையும், அவருக்கு உடந்தையாக இருந்த இருக்கூர் ஊராட்சி தூய்மைப் பணியாளர் சரவணனையும் பரமத்தி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிந்து அதன் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி ஆறுமுகம், சரவணன் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆயுள் தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தும் பரபரப்பு தீர்ப்பளிக்கப்பட்டது.
!