நாளை தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம்... சிஐடியு அறிவிப்பு!!
Dinamaalai January 21, 2025 01:48 PM

நாளை ஜனவரி 22ம் தேதி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி  சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக சிஐடியு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறுகையில், “போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடுசெய்வதில்லை. ஏராளமான வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு 1 கோடி கி.மீ வரை இயக்கப்பட்டு வந்த பேருந்துகள், தற்போது 80 லட்சம் கி.மீ வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. வாரிசு வேலை மறுப்பு, பேருந்து எண்ணிக்கையைக் குறைப்பது என அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட 8 அரசாணைகளை திமுக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதனால் போக்குவரத்து கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருந்து வருகின்றன.

எனவே போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும். மறைமுகமாக தனியார்மயம், ஒப்பந்தமுறை நியமனத்தை கைவிட்டு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வுகால பலன், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஜனவரி 22ம் தேதி தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும்” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.