நேற்று சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், அவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வள்ளுவன் சிலையை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், "வள்ளுவர், வள்ளலார் என சமூக நீதி பேசிய தலைவர்களை களவாட தமிழகத்தில் ஒரு கூட்டமே சுற்றிக்கொண்டிருக்கிறது. வான்புகழ் வள்ளுவருக்கு குமரியில் சிலை திறந்த 25-ம் ஆண்டில் இங்கும் சிலை திறப்பதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்தார்.
முதலமைச்சரின் கருத்து குறித்து இன்று செங்கல்பட்டில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எச். ராஜா. "சனாதன இந்து தர்மத்தில் தர்மம் என்றால் அறம், அர்த்தம் என்றால் பொருள், காமம் என்றால் இன்பம். இந்த மூன்றில் உங்கள் வாழ்க்கை அமையுமானால் மோட்சம் கிடைக்கும். சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில் தானே திருவள்ளுவர் திருக்குறளை எழுதியுள்ளார். ஜோதி வடிவில் இறைவனை வள்ளலாளர் வணங்க சொன்னதும் சனாதனம் தான்.
திருக்குறளை மலம் என்று கூறியவரை நீங்கள் அப்பா என்று சொல்கிறீர்கள். தந்தை என்றால் அப்பாதானே. சிலப்பதிகாரத்தை விபச்சாரியின் கதைன்னு ஈவெரா சொல்லவில்லையா? இந்து மதத்தின் தமிழ் மொழியில் மிகப்பெரிய விரோதிகள் இந்த திராவிட இயக்கத்தவர்கள்.
என் தாய் மொழியான தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன ஈவெராவை தந்தை என்று சொல்கிறவர்கள் எல்லாம் தமிழ் மொழியின் விரோதிகள். திருவள்ளுவருக்கு இது தான் உடை என்று உங்களுக்கு தெரியுமா? எனக்கும் தெரியாது. நீங்க வெள்ளை உடை அணியலாம் நான் காவி போடக்கூடாதா? என் இஷ்டம்" என்று தெரிவித்தார்.