லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் 15 பேர் பரிதாபமாக பலியானார்கள். 83 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
அதன் பின்னர் தொடர்ந்து நடந்து வரும் மோதலில் இதுவரை 45,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி தாக்குதல் நடத்தி கொன்றது. லெபனானின் பல பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
இந்நிலையில், லெபனான் நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், லெபனானில் சில இடங்களை இஸ்ரேல் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், இந்த விவரம் பற்றி சரிவர தெரியாமல், லெபனான் குடிமக்கள் அந்த நகரங்களுக்குள் நுழைய முயன்றனர். அப்போது, இஸ்ரேல் ராணுவம் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் 3 பெண்கள், லெபனான் வீரர் ஒருவர் என 15 பேர் பலியானதாகவும், 83 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.