தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் சென்னை மதுரவாயலில் கடந்த 2021ம் ஆண்டு முதல் 20 ஆயிரம் ரூபாய்க்கு ரமேஷ் என்பவரின் வீட்டில் வாடகைக்கு இருந்து வருகிறார். இவர் சினிமா ஷூட்டிங்காக வாடகை வீட்டில் தங்குவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் கஞ்சா கருப்பு மீது வீட்டின் உரிமையாளர் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நடிகர் கஞ்சா கருப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இதற்கு எதிராக கஞ்சா கருப்பு நான் ஷூட்டிங் சென்ற பிறகு, எனது வீட்டை திறந்து பொருட்களை எல்லாம் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் திருடி உள்ளனர் என்றும், நான் வைத்திருந்த கலைமாமணி விருது, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பேங்க் புக் போன்ற அனைத்தும் காணவில்லை என்று கூறினார்.
மேலும் நான் மிரட்டல் விடுத்ததாக வீட்டின் உரிமையாளர் கொடுத்த ஆடியோ சித்தரிக்கப்பட்டது என்றும், நான் பணம் கொடுக்கவில்லை என்று அவர் கூறுவது பொய் என்றும் கூறினார். ஆனால் நான் வாடகையாக 40 ஆயிரம் ரூபாய் கடந்த மாதம் கொடுத்தேன் என்றும், அதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இருவரையும் மதுரவாயல் காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது நடிகர் கஞ்சா கருப்பு 3 மாதத்தில் வீட்டை காலி செய்து விடுவேன் என்றும், என்னுடைய வீட்டில் எந்த பொருளும் திருடு போகவில்லை என்றும் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். மேலும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.