ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது சீமான் பேசியதாவது:-
சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரண் திமுக, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என இஸ்லாமியர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இவர்களா உங்களைப் பாதுகாக்கிறவர்கள்? இப்படியே நம்பி நம்பித்தான் பல ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் தங்களது 15 முதல் 20 விழுக்காடு வாக்குகளை திமுகவுக்கு வாக்களித்து வருகின்றனர். இதனால்தான் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றனர். உங்களுக்கான பாதுகாப்பு திமுக அல்ல.. திமுகவுக்கான பாதுகாப்புதான் நீங்கள் என்பதை இஸ்லாமியர்கள் உணர வேண்டும். இஸ்லாமியர்கள், ஒரு பெரும்பான்மை தேசிய இனத்தின் மக்களாக உணர வேண்டும். அன்றுதான் இந்த நாடும் மக்களும் எழுச்சி பெறும். கண்ணியமிகு காயிதே மில்ல்த் வாழ்ந்தார்.. புரட்சியாளர் பழனிபாபா வாழ்ந்தார்.. தமது உடம்பில் திமுகவின் இரு வண்ணக் கொடியை போர்த்தி அடக்கம் செய்ய வேண்டும் என்று சொன்ன அதே பழனிபாபாதான், மானத்தமிழர்கள் திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்றார். தேர்தல் என்றாலே குடும்பத்துக்கு ரூ1,000 கோடி; கட்சிக்கு ரூ1,000 கோடி என ரூ2,000 கோடி பேரம் பேசுகின்றனர்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 50 தொகுதிகள், ரூ500 கோடி, துணை முதல்வர் பதவி, 2 அமைச்சர்கள் பதவி தருவதாக இப்போதும் பேரம் பேசுகின்றன அரசியல் கட்சிகள். நாங்கள் வியாபாரம் செய்ய வரவில்லை. தூய அரசியலை முன்னெடுக்கிறவர்கள் நாங்கள்.. இதனை நம்பி வாக்களியுங்கள்.. இல்லை எனில் திமுகவுக்கு வாக்களியுங்கள்.. எங்களுக்கு வாய்க்கு அரிசி போடுங்கள். இந்திய வரலாற்றில், உலக வரலாற்றில் கூட்டணி இல்லாமல் 8.5 வாக்குகளைப் பெற்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. நாங்கள் அரசியல் விடுதலையைப் பெற வந்தவர்கள்.. வியாபாரம் செய்ய வந்தவர்கள் அல்ல.. அரசியல் புரட்சியாளர்கள் நாங்கள். இவ்வாறு சீமான் பேசினார்.