தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 4 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு அருகே உள்ள எள்ளுவிளை கடற்கரையில் நேற்று கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் கோமதிநாயகம், தலைமை காவலர்கள் மாடசாமி, இராஜேந்திர குமார், மாரியப்பன், செல்வக்குமார், இசக்கி, கற்பகராஜா, கார்த்திகேயன், தங்கம், முனிராஜ், பக்ருதீன், குசன், முருகன் உள்ளிட்டோர் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்க்காக இருந்த சுமார் 30 கிலோ எடை கொண்ட 37 பீடி பண்டல்களில் 1110 கிலோ பீடி இலைகள் மற்றும் கடத்தல்காரர்கள் பயன்படுத்திய 4 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், பீடி இலைகளை இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்றது தெரியவந்தது. மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.