மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தனது கார்கள் மற்றும் எஸ்யூவி-க்களின் விலைகளை ரூ.32,500 வரை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாடலை பொறுத்து நிறுவனம் திட்டமிட்டுள்ள விலை அதிகரிப்பானது ரூ.1,500 முதல் ரூ.32,500 வரை இருக்கும். தொடர்ந்து அதிகரித்து வரும் உள்ளீடு செலவுகள் (input costs) மற்றும் செயல்பாட்டு செலவுகளை (operational expenses) ஈடுகட்ட எடுக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
வாகனம் தயாரிப்பதற்கான செலவுகளை கட்டுபடுத்துவதற்கான முயற்சிகள் ஒருபக்கம் எடுக்கப்பட்டு வந்தாலும், ஏற்கனவே அதிகரித்த செலவினங்களில் சிலவற்றை ஈடுகட்ட வாடிக்கையாளர்கள் தற்போது தங்கள் தயாரிப்புகளை வாங்க கூடுதல் பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் மேலும் கூறி உள்ளது.
இது தொடர்பாக நிறுவனம் தனது சமீபத்திய regulatory filing அறிக்கையில், வாகனம் தயாரிக்க ஆகும் செலவுகளை நிர்வகிப்பதற்கும், விலை சார்ந்து எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், எனினும் துரதிர்ஷ்டவசமாக, அதிகரித்த செலவுகளில் சிலவற்றை ஈடுகட்ட தற்போதைய விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிறது" என்று ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனமான சுசுகியின் இந்திய பிரிவான மாருதி சுசுகி குறிப்பிட்டுள்ளது.
செலிரியோவின் விலை ரூ.32,500 வரை அதிகரிக்கும்.
பிரீமியம் மாடலான இன்விக்டோ (Invicto)-வின் விலை ரூ.30,000 வரை அதிகரிக்க கூடும்.
பிரபல எஸ்யூவி மாடல்களான கிராண்ட் விட்டாரா மற்றும் பிரெஸ்ஸா ஆகியவை முறையே ரூ.25,000 மற்றும் ரூ.20,000 என்ற விலை உயர்வை பெறும்.
என்ட்ரி-லெவல் ஆல்டோ கே10 மாடலின் விலை ரூ.19,500 வரை உயரும்.
வேகன்ஆர்-ன் விலை ரூ.15,000 வரை அதிகரிக்கும்.
மாருதி சுசுகி டிசையர் விலை ரூ 10,000 வரை அதிகரிக்கும்.
மாருதி சுசுகி பலேனோவின் விலை (ரூ. 9,000 வரை அதிகரிக்கும்.
மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ் (Fronx) விலை ரூ 5,500 வரை அதிகரிக்கும்.
எஸ்-பிரஸ்ஸோ மற்றும் ஸ்விஃப்ட் மாடல்களின் விலை ரூ. 5,000 வரை உயரும்.
தற்போது,மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் Alto K-10-ன் விலை ரூ.3.99 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. பிரீமியம் மாடலான இன்விக்டோவின் விலை ரூ.28.92 லட்சமாக உள்ளது. இந்த மாத (ஜனவரி 2025) தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்த 4% விலை உயர்வை தொடர்ந்து, அடுத்த மாதமான பிப்ரவரி மாதமே மேற்கண்ட விலை உயர்வை நிறுவனம் அறிவித்திருப்பது மாருதி சுசுகி கார் வாங்க திட்டமிட்டிருப்போரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.