இன்று ஜனவரி 31ம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய துணை குடியரசு தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் சென்னை வருகை தர உள்ளனர். இதனையடுத்து சென்னை பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ட்ரோன்கள் விதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் சென்னை வருவதைக் கருத்தில் கொண்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து இயக்கத்தினை சுமூகமாகவும், தாமதத்தை குறைப்பதை உறுதி செய்வதற்காகவும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணிவரை குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
அதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு (ECR) செல்லும் வாகன ஓட்டிகள், பழைய மகாபலிபுரம் சாலையை (OMR) மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம். குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வணிக வாகனங்களும் விமான நிலையம் முதல் ECR வரை உள்ள சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும். பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.