தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிறாரா மாநில அரசு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றது. அத்துடன் ஹிந்தி திணிப்பு குறித்தும் ஆர்ப்பாட்டங்கள், கண்டனங்களை செய்து வருகிறது. இந்நிலையில், ''தமிழகத்தில், ஹிந்தி திணிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் ஸ்டாலின் முன்வைக்கும் குற்றச்சாட்டில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் நிலைப்பாடு என்ன,'' என, மத்திய - ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்; 'பீஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசத்தில் ஹிந்தியை தவிர மைதிலி, ப்ரஜ்பாஷா, பண்டேலி, அவாதி உட்பட பல்வேறு வட இந்திய மொழிகள் பேசப்பட்டு வந்தன. மேலாதிக்க மொழியான ஹிந்தி திணிக்கப்பட்ட பின் அந்த மொழிகள் காணாமல் போயின' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் என்ன நினைக்கிறார்..? என்பதை அறிய ஆவலாக உள்ளேன் என அவர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஹிந்தி பேசும் மக்கள் வாழும் தொகுதியின் எம்.பி.,யான அவர், ஸ்டாலினின் குற்றச்சாட்டை ஆதரிக்கிறாரா..? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தமிழகத்தில், ஹிந்தி திணிக்கப்படுவதாக ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டு ஆழமற்றது. தி.மு.க., அரசின் மோசமான நிர்வாகத்தை மறைப்பதற்காக இந்த பிளவுபடுத்தும் சூழ்ச்சியை அவர் கையில் எடுத்துள்ளார் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.