'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' நிறுவனத்தின் தலைவர், ஆதவ் அர்ஜுனா. இவர் கடந்த ஆண்டு ஜனவரியில் வி.சி.க-வில் இணைந்தார். அடுத்த மாதமே அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தார், திருமா. இது கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்தவர்களை கடுப்பாக்கியது. அதாவது ஏற்கனவே வெற்றிபெற்ற சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளுடன் ஒரு பொதுத் தொகுதி கேட்கப்பட்டது. ஆனால் பிற கூட்டணி கட்சிகளின் அதிருப்தியை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்த திமுக தலைமை, பொதுத் தொகுதியை ஒதுக்கவில்லை. இதையடுத்து சம்பத்தப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் வி.சி.க-வின் வெற்றிக்காக ஆதவ் அர்ஜுனா பணியாற்றினார்.
திருமா, ஆதவ்இந்த சூழலில்தான் கடந்த செப்டம்பரில் திருமாவளவன் பேசும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் அவர் கூறிய, 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' கருத்து தி.மு.க-வினரை அதிர்ச்சியடைய செய்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "முன்பு நான் செங்கல்பட்டில் பேசியதை தற்போது எனது அட்மின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்" என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
பிறகு இந்த கேள்வி தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில் பங்கேற்ற ஆதவ் முன்பு வைக்கப்பட்டது. அதற்கு அவர், "4 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர் துணை முதல்வராகும்போது, 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட திருமாவளவன் ஆகக் கூடாதா?" என்றார். இது தி.மு.க-வினரை மேலும் சூடாக்கியது.
பிறகு விகடன் பிரசுரம் மற்றும் 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' நடத்திய 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு ஆதவ், "மன்னர் பரம்பரை உருவாவதற்கு இனி ஒருபோதும் தமிழகம் இடம் தராது. 2026-ம் ஆண்டுக்கான தேர்தல் பணிகள், மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். இங்கு பிறப்பால் ஒருவர் முதலமைச்சர் ஆகக் கூடாது" என்றார். இந்த விவகாரம் மேலும் அனலை கிளப்பியது. இதையடுத்து திருமா வெளியிட்ட அறிக்கையில், "ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள், கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பை கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கிறது. எனவே அவர் ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Udhayanidhiஇதற்கு எதிர்வினையாற்றிய ஆதவ், "எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் (திருமா) இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை. ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன். என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் வி.சி.க-விலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக் கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன்" என தெரிவித்திருந்தார். இந்த சூழலில்தான் த.வெ.க-வில் இணைய போகிறார் ஆதவ் என்கிற தகவல் வெளியாகிறது.
என்னதான் நடக்கிறது, த.வெ.க-வில்?
இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், "சமீபத்தில் டெல்லிக்கு ஆதவ் அர்ஜூனா சென்றார். அங்கு பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு த.வெ.க-வை கொண்டுவருவதற்கான அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இதையடுத்து சமீபத்தில் த.வெ.க தலைவர் விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறார், ஆதவ். அப்போது, த.வெ.க-வில் இணைய தனக்கு இருக்கும் விருப்பத்தை சொல்லியிருக்கிறார். கூடவே, "ஏற்கெனவே நான் வி.சி.க-வில் துணை பொதுச்செயலாளராக இருந்திருக்கிறேன். எனவே, த.வெ.க-வில் பொதுச்செயலாளர் பதவி தனக்கு வேண்டும்" என்ற கோரிக்கையும் வைத்திருக்கிறார். இதையெல்லாம் அமைதியாக கேட்ட விஜய், "விரைவில் முடிவை தெரிவிக்கிறேன்" என கூறியிருக்கிறார்.
தவெக தலைவர் விஜய்இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மக்களின் மனநிலை குறித்து சர்வே எடுக்க முடிவு செய்திருக்கிறார், ஆதவ் அர்ஜூனா. இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு பேரை தேர்வு செய்ய திட்டம் வகுத்திருக்கிறார். இதன் அடிப்படையில் 2026 தேர்தலுக்கான வியூகளை வகுக்க திட்டம் வகுத்திருக்கிறார், அவர். முன்னதாக அவர் அ.தி.மு.க-வில் இணையப்போவதாக தகவல் வெளியானது. இதற்காக அந்த கட்சியில் விளையாட்டு மேம்பாட்டு அணியை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது. இந்த சூழலில்தான் த.வெ.க-வில் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார், ஆதவ். இதற்கு பின்னால் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்தும் பா.ஜ.க-வின் கணக்கும் இருக்கிறது. மறுபக்கம் ஆதவ் அர்ஜூனாவின் இந்த மூவ், த.வெ.க-வின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தரப்பை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது" என்றனர்.
கூடைப்பந்து டு அரசியல்!
தொடர்ந்து ஆதவ் அர்ஜூனாவின் பின்னணி குறித்து பேசுவோர், "சிறுவயதிலிருந்தே கூடைப்பந்து விளையாட ஆதவ் அர்ஜூனாவுக்கு பிடிக்கும். மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கெடுத்துள்ளார். மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவில் படித்துக்கொண்டே அரசியலில் கவனம் செலுத்தினார். அந்த நேரத்தில்தான் லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மகள் டெய்ஸியை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். பிறகு தி.மு.க-வுக்காக தேர்தல் வியூகங்களை வகுக்கும் பணியில் ஈடுபட்டார்.
ஸ்டாலின்குறிப்பாக ஸ்டாலினின் 'நமக்கு நாமே' திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஆதவ் முக்கிய பங்கு வகித்தார். பிறகு 'ஒன் மைண்ட் இந்தியா' என்ற நிறுவனத்தை அவர் தொடங்கினார். கூடவே தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்றினார். இதையடுத்து 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்ற தேர்தல் வியூக வகுக்கும் நிறுவனத்தை தொண்டங்கினார். பிறகு வி.சி.க-வில் இணைத்துத்தவருக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அப்போதுதான் தி.மு.க குறித்து ஆதவ் முன்வைத்த அதீத விமர்சனம் அதிர்வலைகளை கிளப்பியது. இதனால் வி.சி.க-விலிருந்து விலகினார், ஆதவ். தற்போது த.வெ.க-வில் இணைவதற்கு காய் நகர்த்தி வருகிறார்" என்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், "த.வெ.க-வில் ஆதவ் அர்ஜூனா இணைய இருப்பதற்கு பின்னால் பா.ஜ.க இருக்கிறது என உறுதியாக சொல்ல முடியாது. தமிழக அரசியலில் என்ன நடந்தாலும் பாஜகவுடன் இணைத்து அரசியல் முடிச்சு போடுகிறார்கள். ஏற்கெனவே வி.சி.க-வில் இருந்த போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதால் 6 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார், ஆதவ். ஒரு அரசியல்வாதி 6 மாதங்களுக்கு அமைதியாக இருக்க முடியாது. எனவே இந்த முயற்சியை அவர் எடுத்திருக்கலாம். அதேநேரத்தில் ஆதவ்வுக்கு என தனி வாக்குவங்கி கிடையாது.
தராசு ஷ்யாம்லாட்டரி மார்ட்டின் மருமகன் என்கிற அடையாளம் மட்டுமே அவரிடம் இருக்கிறது. இந்தசூழலில் சர்ச்சை கருத்துக்களை பேசியதால் மீடியா வெளிச்சத்துக்கு வந்தார். எனவே த.வெ.க-வில் கட்சியில் இணைவதால் எந்த தாக்கமும் ஏற்படாது. ஆதவ்வுக்கு பொதுச்செயலாளர் பொறுப்பு கிடைக்காது. அப்படி கொடுத்தால் த.வெ.க பிளவுபடும். விஜய்யின் தேர்தல் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமி இருக்கிறார். எனவே அவரை எடுத்துவிட்டு ஆதவ் அர்ஜூனாவை நியமிப்பதும் கடினம். ஒரு கட்சிக்குள் புதிதாக வரும் நபருக்கு பெரிய பதவிகள் வழங்கினால் பூகம்பம் வெடிக்கும்" என்றார்.
பொறுத்திருந்து பார்ப்போம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...