பிப் 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யபடுவது ஏன்? இந்த நாள் எப்படி தேர்வு செய்யப்பட்டது தெரியுமா?
Newstm Tamil January 31, 2025 01:48 PM

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த தினத்தை பட்ஜெட் தினம் என்றே அழைக்கின்றனர். ஆனால், 2016ஆம் ஆண்டு வரை பட்ஜெட் பிப்ரவரி இறுதி வாரத்தில்தான் தாக்கல் செய்யப்பட்டது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்தே மத்திய பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி இறுதி வாரத்தில்தான் நடைபெற்று வந்தது. குறிப்பாக பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறும். 2016 வரை இந்த நடைமுறைதான் அமலில் இருந்தது. 2017-ம் ஆண்டு தான் முதல் முறை பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட தொடங்கியது. அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்த தேதியை மாற்றினார். இந்த மாற்றத்தில் 2 முக்கிய காரணங்கள் முன்வைக்கப்பட்டது.

பிப்ரவரி 1-ம் தேதி தேர்வு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் அடுத்த நிதியாண்டிற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய கால அவகாசம் வழங்குவது ஆகும். பிப்ரவரி 28-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 1-ம் தேதிக்கு மாற்றுவதால், ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்கும் அடுத்த நிதி ஆண்டிற்கு புதிய பட்ஜெட்டின் அடிப்படையில் மாற்றங்கள் செய்ய கால அவகாசம் கிடைக்கும். இதனால் நலத்திட்டங்கள் கால தாமதம் ஏற்படாமல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆங்கிலேயர்கள் நடைமுறையை பின்பற்றாமல், நமக்கான தனிப்பட்ட வழிமுறைகள் உருவாக்கவும் இது வழிவகுக்கும் என கூறப்பட்டது.

காரணங்கள் இருப்பினும், தேதியை முன்கூட்டியே மாற்ற எதிர்ப்பு இருந்தது. தேர்தல் காரணத்தினால் தேதி மாற்றப்படுவதாக புகார் முன்வைக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய பட்ஜெட் தாக்கலுக்கும், தேர்தலுக்கும் சம்மந்தமில்லை. தேர்தலினால் மத்திய பணிகள் தடைப்படக்கூடாது என மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதே போன்று, மத்திய பட்ஜெட்டில் ரயில்வே ஒன்றாக 2017-ம் ஆண்டு முதல் இணைக்கப்பட்டு ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. இந்திய பட்ஜெட் தாக்கல் வரலாற்றில் மேலும் ஒரு பெரிய மாற்றம் நேரம் ஆகும். 1998ஆம் ஆண்டு வரை மாலை 5 மணிக்கே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அதற்கு காரணம், ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இங்கிலாந்து நேரப்படி, அங்கு பிற்பகல் என்றால் இங்கு மாலை என்ற அடிப்படையில் மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த முறை 1999 முதல் மாற்றப்பட்டு காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் வகையில் அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மாற்றினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.