மீண்டும் மீண்டும் அரங்கேறும் பண மோசடி... நம்முடைய பணத்துக்கு நாமேதான் பாதுகாப்பு!
Vikatan January 31, 2025 02:48 PM

தினமொரு மோசடி எனும் அளவுக்கு, தமிழ்நாட்டில் நிதி மோசடிகள் தொடர் கின்றன. ‘ஒரு லட்சம் கட்டினால், ஒன்றரை லட்சம் லாபம்’ என்றெல்லாம் ஆசை காட்டி, சேலம் மாவட்ட மக்களிடம் பல கோடி ரூபாய்களை சுருட்டிய கும்பலை மடக்கியிருக்கிறது, தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு. ‘அன்னை தெரசா அறக்கட்டளை’ என்கிற பெயரில் அன்னதானம் உட்பட சில தொண்டுகளைச் செய்து, மக்களை நம்ப வைத்துதான் புதுவிதமாக மோசடிகளை அரங்கேற்றியுள்ளனர். இதுவரையில் கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படை யில் சுமார் ரூ.100 கோடி அளவுக்கு மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திடீரென சம்பந்தமில்லாத ஒரு கும்பல் ஊருக்குள் வந்து, ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அறக்கட்டளை என்று போர்டு மாட்டிக்கொண்டு உட்கார... செல்வந்தர்கள், அரசு ஊழியர்கள், நன்கு படித்தவர்கள், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் எனப் பலரும் ஓடோடி போய் பணம், நகை என அள்ளிக் குவித்துள்ளனர், ‘முதலீடு’ என்கிற பெயரில்.

செய்தித்தாள்களின் ஒரு பக்கத்தில், ‘ஈமு கோழி என்கிற பெயரில் மோசடி செய்து, மக்களிடம் பற்பல கோடிகளைச் சுருட்டிய குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்கிற செய்திகள் படபடத்துக்கொண்டிருக்க, மற்றொரு பக்கத்தில் சேலத்தில் இப்படியொரு மோசடி அரங்கேறிய செய்தியும் பளீரிடுகிறது!

இதில் பெருங்கொடுமை... ‘என்னதான் நடக்கிறது’ என்று தெரிந்துகொள்வதற்காக சாதாரண உடையில் அந்த மண்டபத்தில் புகுந்த காவல்துறையினரை, பொதுமக்களே தாக்கியதுதான். ‘எங்களுக்கு பணம் ஒழுங்காகத்தான் வந்துகொண்டிருக்கிறது. நீங்கள் கெடுத்துவிடாதீர்கள்’ என்று சொல்லி துரத்தி யடித்துள்ளனர், அப்போதைக்குக் கிடைத்துக்கொண்டிருந்த பணத்தை நம்பி.

எத்தனை எத்தனை மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்தாலும், எத்தனை குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும் விதவிதமான திட்டங்களின் பெயரால் பணம் திரட்டும் மோசடிக்காரர்களை மட்டும் தொடர்ந்து மக்கள் நம்பிக்கொண்டே இருப்பது ஏன்? பட்டவர்த்தனமாக ஒரு பெருநகரத்தில் முகாமிட்டு, மக்களைத் திரட்டி, இப்படி பணம் பறிப்பவர்களைப் பற்றி காவல்துறை ஏன் ஆரம்பத்திலேயே விசாரித்துத் தடுக்கத் தவறுகிறது? இத்தகைய மோசடிகளை அரங்கேற்றப்படுவதன் பின்னணியில் காவல்துறை, அரசியல் வாதிகளின் கள்ளக் கூட்டணி இருப்பதை எந்த அரசமைப்பும் கண்டு கொள்ளாமலேயே கடப்பது ஏன்?

ஒவ்வொரு தடவையும் மோசடி வெடித்து வெளிவரும்போது, இப்படியெல்லாம் எழும் கேள்விகளுக்கு, பதில்கள்தான் கிடைப்பதில்லை. ஆக, எந்த விஷயத்திலும் நமக்கு நாமேதான் பாதுகாப்பு மக்களே. முதலீடு என்றால் என்ன; உரிய வருமானம் என்றால் என்ன; பேராசை என்றால் என்ன என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்து, நம்மை மாற்றிக்கொண்டு எப்போது ஆக்கபூர்வமாகச் செயல்படப்போகிறோமோ... அப்போதுதான் நம் பணத்துக்குக் கிடைக்கும் முழுமையான பாதுகாப்பு!

- ஆசிரியர்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.