தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.62,000-த்தை நோக்கி நகர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,730-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.61,840-க்கும் விற்பனை ஆகி வருகிறது. இந்த விலை அதிகரிப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
'2027-ம் ஆண்டு தங்கம் விலை பவுனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டிவிடும்' என்று நிபுணர்கள் கூறும் இந்த வேளையில், நாளை தாக்கல் ஆக உள்ள பட்ஜெட்டிற்கு பிறகு, தங்கம் விலை குறையுமா என்று கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தரிடம் பேசினோம்.
ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர் பல்வேறு காரணிகள்..."நாளைய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு, தங்கத்தின் விலை ஏறுமா...இறங்குமா என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. இந்தியாவில் தங்கம் விலை பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன.
அதில் சர்வதேச நிலவரங்கள், போர் பதற்றம் போன்றவை இருந்தாலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி வரி ஆகியவை முக்கிய காரணிகள்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் தங்கம் சார்ந்த வியாபாரிகள் மற்றும் தொழிலில் இருப்போர்களின் கோரிக்கை என்னவென்றால் இறக்குமதி வரியை 6-ல் இருந்து மூன்றாக குறைக்க வேண்டும் என்பது ஆகும். இப்படி செய்தால், தங்கம் விலை குறையுமா என்பதை தெரிந்துகொள்ள கடந்த ஆண்டு தங்கம் விலை நிலவரத்தை தெரிந்துகொள்ள வேண்டும்.
அதற்கு முன்பே!கடந்த ஆண்டு, மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டது தான். இறக்குமதி வரி குறைக்கப்பட்டால், தங்கம் விலை குறைய வேண்டும். ஆனால், அப்படி தங்கம் விலை குறைவதற்கு முன்பு, சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரித்துவிட்டது. அதனால், இறக்குமதி வரி குறைப்பின் பலன் இந்திய தங்கம் விலையில் பெரிதாக எதிரொலிக்கவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம், தங்கம் இறக்குமதி 136 மெட்ரிக் டன்னாகவும், நவம்பர் மாதம் 117 மெட்ரிக் டன்னாகவும் அதிகரித்துள்ளது. இறக்குமதி வரி குறையும்போது, தங்கம் இறக்குமதி அதிகரிக்கும். இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 21 சதவிகிதம் தங்கம். இவ்வளவு தங்கமும் அமெரிக்க டாலரை பயன்படுத்தியே வாங்கப்படுகிறது. இதனால், அந்நிய செலாவணி கையிருப்பு குறைகிறது. இன்னொரு பக்கம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது.
தங்கம் இறக்குமதி... 21 சதவிகிதம்...தங்கமே 21 சதவிகிதம் இறக்குமதி செய்யப்படும்போது, மீதி பொருட்களுக்கு இது வர்த்தக பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.
மொத்தமாக பார்க்கும்போது, தங்கம் இறக்குமதி வரி குறையும்போது, தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால், இறக்குமதி மட்டும் அதிகரிக்கும். அதன்படி பார்த்தால், பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டால் தங்கம் விலை குறையாது. மேலும், சர்வதேச அளவில் பார்க்கும்போது கடந்த இரண்டு ஆண்டுகளை போல, தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் தான் இருக்கும். அதனால், தங்கம் இறக்குமதி வரி குறைப்பு இந்த ஆண்டு பட்ஜெட்டில் இடம்பெறாது என்பது என் கருத்து" என்று கூறினார்.