பெரும்பாலானோர்கள் மீண்டும் நம்முடைய பாரம்பரியமான சருமப் பராமரிப்பில் பயன்படுத்தப்பட்ட வந்த இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு மாறியிருக்கிறோம்.
அதில் மிக முக்கியமான ஒன்று என்றால் அது மஞ்சள். குறிப்பாக சருமத்துக்கு கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்துவது.
தொடர்ச்சியாக சருமத்துக்கு மஞ்சளை பயன்படுத்தும் போது சருமத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் மாசுக்கள் நீங்குவதோடு சருமம் இயற்கையாகவே பொலிவாகவும் இளமையாகவும் மாறும்.
மஞ்சள் மிக அற்புதமான மூலிகை. அத்தகைய மஞ்சளுடன் என்ன மாதிரியான பொருள்களைச் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். எதை வேண்டுமானாலும் மஞ்சளுடன் சேர்த்து பயன்படுத்தக் கூடாது.
மஞ்சளில் குர்குமின் என்னும் வேதிப்பொருள் மிக வீரியமாக இருக்கும். இது ஆன்டி - இன்பிளமேஷன் தன்மை கொண்டது என்பதால் இதை ஏதாவது ஒரு பொருளுடன் சேர்த்து பயன்படுத்துவது சருமத்துக்கு தீங்கை விளைவிக்கும்.
அதனால் மஞ்சளுடன் இணைந்து செயல்படக் கூடிய பால், தண்ணீர், தயிர், ரோஸ்வாட்டர் போன்ற பொருள்களுடன் மட்டுமே சேர்த்து பயன்படுத்த வேண்டும். சில எலுமிச்சை சாறுடன் மஞ்சளை சேர்த்து பயன்படுத்துவார்கள். அது மிக தவறு. சிட்ரிக் அமிலத்தை மஞ்சளுடன் சேர்த்து பயன்படுத்தில் சருமத்தில் எரிச்சல் மற்றும் அழற்சி ஆகியவை ஏற்படும்.
நீண்ட நேரம் முகத்தில் வைத்திருப்பது
இந்த தவறு பெரும்பாலானோர் செய்யும் தவறு தான். மஞ்சள் தானே! மருத்துவ குணங்கள் நிறைந்தது தானே! அதனால் எவ்வளவு நேரம் வேண்டுமானால் சருமத்தில் அப்படியே வைத்திருக்கலாம் என்று நினைத்து நீண்ட நேரம் முகத்தில் மஞ்சளை அப்ளை செய்து வைத்திருப்பார்கள்.
சிலரெல்லாம் பருக்களைப் போக்க மஞ்சளை பயன்படுத்துவதாக சொல்லி இரவு முழுக்க முகத்தில் மஞ்சளை வைத்திருப்பார்கள். எந்த வகையான பேஸ்பேக் அப்ளை செய்தாலும் குறைந்தபட்சம் 20-30 நிமிடங்களுக்குள் அதை கழுவிவிட வேண்டும். அது மஞ்சள் பேஸ்பேக்குக்கும் பொருந்தும்.
மஞ்சளை முகத்தில் அப்ளை செய்து நீண்ட நேரம் வரை வைத்திருந்தால் அது முகத்தில் ஆங்காங்கே மஞ்சள் நிற தடுப்புகளை ஏற்படுத்துவதோடு அதிக நேரம் மஞ்சள் முகத்தில் இருப்பது பருக்கள் உண்டாவதற்கும் காரணமாக மாறிவிடும்.
சுத்தமாக தேய்த்து கழுவுதல்
மன அழுத்தம், அவசர கதி என நாம் ஓடிக் கொண்டிருக்கும்போது நம்முடைய சரும பராமரிப்பில் நமக்கு போதிய நேரம் ஒதுக்க முடிவதில்லை. முகம் கழுவும்போது கூட ஒழுங்காகக் கழுவாமல் அவசர அவசரமாகக் கழுவுவதுஈ ஒழுங்காகக் கழுவாமல் இருப்பது போன்றவற்றை செய்கிறோம்.
ஆனால் முகத்தில் மஞ்சள் அப்ளை செய்திருக்கும்போது அவசர அவசரமாகக் கழுவக் கூடாது. அதேபோல வெந்நீர் இல்லாமல் குளிர்ந்த அல்லது சாதாரண நீரில் முகத்தின் எல்லா பக்கத்திலும் இருக்கும் மஞ்சளையும் நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.
குறிப்பாக காதோரங்கள் போன்ற பகுதிகளில் நன்கு தேய்த்துக் கழுவி விட்டு, பிறகு கெமிக்கல் இல்லாத மென்மையான மாய்ச்சரைஸர் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.
சோப்பு பயன்படுத்துவது
பெரும்பாலானவர்கள் செய்கின்ற மிகப்பெரிய தவறு இதுதான். குளிக்கும்போது மஞ்சள் அப்ளை செய்தாலும் சரி, மஞ்சளை பேஸ்பேக்காக போட்டாலும் மஞ்சள் அப்ளை செய்து முடித்த பிறகு, அதை கழுவும்போது சோப்பு பயன்படுத்துவது. அது மிகவும் தவறான ஒன்று.
முகத்துக்கு மஞ்சள் பயன்படுத்திய பிறகு வெறும் தண்ணீரில் தான் முகத்தைக் கழுவ வேண்டுமே தவிர சோப் எதுவும் பயன்படுத்தக் கூடாது. மஞ்சள் பேஸ்பேக் பயன்படுத்திய பின் குறைந்தது 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை சோப் எதுவும் பயன்படுத்தக் கூடாது.
ஒரே மாதிரி அப்ளை செய்வதில்லை...
நாம் குளிக்கும்போது மஞ்சள் அப்ளை செய்தாலும் சரி, பேஸ்பேக் போடும்போதும் சரி அவசரகதியில் கடகடவென போடுகிறோம். மஞ்சளை பொருத்தவரையில் அவசர அவசரமாக முகத்தில் அப்படி அப்ளை செய்வது மிகவும் தவறு. அதை முதலில் தவிர்க்க வேண்டும்.
முகம் மற்றும் கழுத்து, உடல் என ஒரேமாதிரியாக மஞ்சள் அப்ளை செய்யாமல் ஆங்காங்கே திட்டு திட்டாக அப்ளை செய்வதால் அதன் முழு பலனும் உங்களுக்குக் கிடைக்காது. அதோடு அது முழுமையாக சருமத்துக்குள் செல்லாது. அப்படி அப்ளை செய்தாலும் முகத்தில் அங்கங்கே மஞ்சள் திட்டு திட்டாக இருக்கும். அதனால் கழுவிய பிறகும் கூட ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறான நிற வேறுபாடுகள் இருக்கும்.
மஞ்சள் நன்றாக ஒட்டிக் கொண்ட இடத்தில் சருமம் சற்று மஞ்சளாகவும் மற்ற இடங்களில் உங்களுடைய வழக்கமான சரும நிறமும் இருக்கும்.
மஞ்சளை ரொம்ப திக்காக அப்ளை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மெல்லிய லேயர் அப்ளை செய்தால் போதும். ஆனால் முகம், கழுத்து மற்றும் கழுத்தைச் சுற்றிய எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி சீராக அப்ளை செய்ய வேண்டியது மிக அவசியம்.