சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை மறித்து, இளைஞர்கள் சிலர் அத்துமீறும் வகையில் வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வீடியோவில் இருந்த 2 கார்களையும், 4 கல்லூரி மாணவர்களையும் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து முக்கிய நபரான சந்துரு என்பவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்துரு என்பவர் மீது ஏற்கனவே கடத்தல் மற்றும் சீட்டிங் உள்ளிட்ட 2 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி மீது பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் எந்த பாரபட்சமும் இருக்கக் கூடாது என்று விமர்சித்தனர்.
இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஈசிஆர் விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-
தினமும் 5 பொய்களை சொல்வதென சத்தியம் செய்து கொண்டு அரசியல் செய்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில் எங்கு குற்றம் நடந்தாலும், அதனை திமுகவுடன் தொடர்புபடுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை பூதாகரமாக்க முயற்சித்தார்கள். ஆனால் அதற்கு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துவிட்டது. 2 நாட்களுக்கு முன் ஈசிஆரில் நடந்த சம்பவத்தையும் திமுகவுடன் தொடர்புபடுத்தி பேசி இருக்கிறார். திமுக கொடியுடன் சென்றால், குற்றம் செய்வதற்கு லைசென்ஸா என்று கீழ்த்தரமாக பேசி இருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்டுள்ள சந்துரு என்பவர் அதிமுகவைச் சேர்ந்தவர். அந்த வீடியோவில் இருந்த கார் ஒன்று, நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளரின் சகோதரர் மகனுக்கு சொந்தமானது. அந்த காரினை பயன்படுத்தியவர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அதிமுகவினர் செய்யும் குற்றங்களுக்கு கூட திமுக மீது பழி சுமத்துகிறார். கடந்த ஓராண்டில் மட்டும் அதிமுகவினர் செய்த குற்றங்களின் எண்ணிக்கை ஏராளம். திமுகவின் கொடியை கட்டிக் கொண்டு அதிமுகவினர் குற்றத்தில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.