#featured_image %name%
கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனின் படைவீடு கோவில்களில் முக்கிய ஸ்தலமான அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா புஷ்பாஞ்சலி வழிபாடு நாளை பிப்ரவரி 3ஆம் தேதி, தை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. சுமார் 2 டன் மலர்களால் சுவாமி அச்சன்கோவில் தர்ம சாஸ்தாவுக்கு புஷ்பாஞ்சலி வழிபாடு நடைபெற உள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் கேரள மாநிலத்தில் உள்ளது அச்சன்கோவில். இங்கு பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில்களில் ஒன்றான தர்மசாஸ்தா கோவில் உள்ளது. இது ஐயப்பனின் படைவீடு கோவில்களில் மூன்றாவது ஸ்தலமாக உள்ளது. இங்கு தர்மசாஸ்தா, பூர்ணம்மாள் புஷ்கலாதேவியுடன் அரசனாக அருள் பாலிக்கிறார்.
இந்தக் கோவிலுக்கு சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பலர் சென்று வருகிறார்கள். இந்தக் கோவில் மூலவர் தர்மசாஸ்தா பரசுராமரின் கைகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக தலபுராணம் கூறுகிறது. தை மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று பிரதிஷ்டை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
எனவே தை மாதத்தில் ரேவதி நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் புஷ்பாஞ்சலி விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் நாளை – பிப் 3ஆம் தேதி புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு நாளை காலையில் 5 மணிக்கு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், பகலில் நெய் அபிஷேகம் கலசாபிஷேகம், அஷ்டாபிஷேகம் களபாபிஷேகம் ஆகியன நடைபெறும். மதியம் களபாபிஷேகம் நடத்தி உச்சி கால பூஜை வழிபாடு நடைபெறும்.
மாலையில் யானை மீது சுவாமி அமர்ந்து சீவேலி வழிபாடு தொடர்ந்து மஹா தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து 2 டன் பூக்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, பின்னர் அந்தப் பூக்களைக் கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெறும்.
பகல் இரவு அன்னதானமும் நடைபெறும். விழாவில் கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் தமிழக, கேரள பக்தர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள். விழா ஏற்பாடுகளை அன்பர்கள் செய்து வருகின்றனர்.
News First Appeared in