விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் திண்டிவனத்தில் மறைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியின் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நம்மை மனிதர்களாக தலைநிமிர வைத்தவர்கள் மார்கஸ், அம்பேத்கர் மற்றும் பெரியார். இன்று பெரியார் குறித்து கொச்சைப்படுத்தி பேசக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்துள்ளனர். அவர்களை பின்னால் இருந்து இயக்கக் கூடியவர்கள் யார் என்பதும் அவர்கள் மூலமாகவே அம்பலமாகியுள்ளது. பெரியார் இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து அவரை வீழ்த்த வேண்டும் என்று யாரும் முயற்சித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த கும்பல் ஒவ்வொரு முறையும் தோற்றுப்போனார்களே தவிர அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகளுக்கு மட்டும் இன்றி விசிகவுக்கும் பெரியார்தான் வழிகாட்டி. ஆகவே பெரியாரை விமர்சிப்பவர்களை இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. அந்நியர் என்று பெரியாரை சொல்பவர்கள் நாளை அம்பேத்கர் விமர்சிக்க எவ்வளவு நேரம் ஆகும். பெரியார் தமிழர் கிடையாது எனவும் தமிழ் தேசியத்தின் பகைவர் என்றும் உளறிக் கொண்டிருக்கிறார்கள். இனியும் இதை அனுமதித்தால் இனி அம்பேத்கரை மராட்டியர் என்று கூறுவார்கள். மேலும் அவருக்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பார்கள் என்று கூறினார்.