அவசரமான இந்த உலகத்தில் சமையலையும் பெண்கள் அவசரமாக தான் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நம் முன்னோர்கள் விறகு அடுப்பில் சமைத்தும், மண்பாண்டங்கள், செம்பு மற்றும் வெண்கல பாத்திரங்களை சமையலுக்கு உபயோகப்படுத்தினார்கள். அதில் சமைக்கும் உணவுகள் அதீத சுவையுடனும், அதிக ஆரோக்கியம் வாய்ந்ததாகவும் இருந்தது. இந்த பாத்திரங்களை பயன்படுத்தி சமைக்கும் போது நீண்ட நேரம் எடுத்து கொண்டது. ஆகவே இன்றைய அவசர காலகட்டத்தில் மண்பாண்டங்கள், வெண்கல பாத்திரங்களின் உபயோகங்கள் குறைந்து எவர் சில்வர் பாத்திரங்கள், NonStick பாத்திரங்கள், குக்கர் போன்ற பாத்திரங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.
தற்போதைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் அனைவரது சமையல்கட்டுகளிலும் இடம் பெறும் முக்கிய பொருளாக பிரஷர் குக்கர் உள்ளது. பால் குக்கர், இட்லி குக்கர், பிரஷர் குக்கர் என ஏராளமான குக்கர் வகைகள் உள்ளன.குக்கரில் முக்கியமாக இருப்பது விசில் மற்றும் ரப்பர். இவை இரண்டும் குக்கர் சரியாக இயங்க முக்கியமானது. இவற்றில் விசில் சரியில்லை என்றாலும், மூடியில் உள்ள ரப்பர் சரியில்லை என்றாலும் குக்கர் சரியாக இயங்காது. ஒரு குக்கரை வெகு நாட்களாக பயன்படுத்தும் போது அதன் மூடியில் உள்ள ரப்பர் தளர்ந்துவிடும். அதனால் குக்கர் சரியாக மூட முடியாமல்போய்விடும். குக்கரில் இருந்து நீர் வெளியேற தொடங்கும். பிரஷர் குக்கர் மூடியின் ரப்பரை சில சுலபமான வழிகள் மூலம் சரிசெய்யலாம். அவற்றை குறித்து தற்போது பார்க்கலாம்.
குக்கர் மூடியை சரிசெய்யும் வழிகள்
பிரஷர் குக்கரின் மூடி தளர்ந்துவிட்டால் அதனை உடனடியாக மாற்ற வேண்டும். சில நேரங்களில் காலையில் அவரசமாக சமைக்கும் போது பார்க்கநேரும். அப்போது தளர்ந்துள்ள குக்கர் மூடியை 15 முதல் 20 நிமிடங்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது தளர்வாக உள்ள ரப்பர் குளிர்ந்த நிலையில் சுருங்கும். இப்போது குக்கர் மூடியை பயன்படுத்தினால் அது சரியாக வேலைசெய்யும். குளிர்ந்த நீரில் தளர்ந்த ரப்பருடன் குக்கர் மூடியை 10 நிமிடம் வைத்து மறுபடியும் உபயோகித்தால் விசில் வரும். ஆனால் இதையே நாம் திரும்ப திரும்ப செய்யக்கூடாது.
ரப்பர் தளராமல் இருக்க செய்ய வேண்டியவை
பிரஷர் குக்கரை கழுவும் போது அதிலுள்ள ரப்பர் மற்றும் விசிலை தனியாக கழற்றி கழுவ வேண்டும். அப்படி கழுவும்போது அதில் அழுக்குகள் சேராமல் நீண்ட நாட்கள் வரை வரும். குக்கர் மூடியில் உள்ள ரப்பர் இறுக்கமாக இருந்தால் அதனை கத்தி வைத்தோ அல்லது வேறு எதாவது கூர்மையான பொருட்களை வைத்து அகற்ற கூடாது. அப்படி அகற்றும்போது ரப்பர் வெட்டுப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.