வழியிலேயே இறக்கி விட்டதால் ஆத்திரம்.. நடத்துனரை கத்திரிக்கோலால் குத்திய 17 வயது சிறுவன் கைது!
Dinamaalai February 04, 2025 12:48 AM

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆழ்வான் துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் வெளியூரில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தென்காசியில் இருந்து தான் வேலை செய்யும் பகுதிக்கு ரயிலில் செல்ல முயன்றபோது ரயிலை தவறவிட்டதாகக் கூறப்படுகிறது. மது அருந்தியிருந்த சிறுவன், தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம், ஆலங்குளம் வழியாக நெல்லைக்கு செல்லும் அரசு பேருந்தில் ஏறினான்.

பின்னர் பேருந்தின் படிகளில் தொங்கிக் கொண்டு நடத்துனருடன் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டான். இதைத் தொடர்ந்து, வாக்குவாதம் அதிகரித்ததால், நடத்துனர் சிறுவனை பாவூர்சத்திரம் அருகே இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், அந்த வழியாக பேருந்து திரும்புவதற்காகக் காத்திருந்தான். அந்த நேரத்தில், நெல்லை பாபநாசத்திலிருந்து சங்கரன்கோவிலுக்குச் செல்லும் அரசுப் பேருந்து பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தை அடைந்தது.

அப்போது குடிபோதையில் இருந்த சிறுவன், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பேருந்து நடத்துனர் மாடசாமியின் கழுத்தில் கத்தரிக்கோலால் குத்த முயன்றான். அவரைத் தடுக்க முயன்றபோது, நடத்துனரின் இடது காதில் காயம் ஏற்பட்டது. அப்போது பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்து நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.