வேங்கை வயல் வழக்கு திடீரென வேறு கோர்ட்டுக்கு மாற்றம்..ஏன் தெரியுமா?
Seithipunal Tamil February 03, 2025 11:48 PM

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கு வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் இருந்து புதுக்கோட்டை நடுவர் கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது வன்கொடுமை வழக்கு இல்லை என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,இந்த கீழ்த்தரமான சம்பவத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவாளிகள் கண்டறியப்படாமல் இருந்தநிலையில்,சமீபத்தில்  சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அப்போது அதில் மூன்று நபர்கள் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலினத்தவர் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதா என பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததுடன் இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. அதேபோல் அரசு தரப்பில் அறிவியல் சாட்சியங்கள் உள்ளதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில்  வேங்கை வயல் தொடர்பான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என்று குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவர் சார்பில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இது போல சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டதில், இந்த வழக்கு, பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வராததால், வழக்கை நீதித்துறை நடுவர் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்ற மனு மீதான விசாரணை நடந்து வந்ததுதொடர்பாக இரு தரப்பினரும் வாதங்களை முன் வைத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து வழக்கு வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் இருந்து நீதித்துறை நடுவர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. மேலும் இது வன்கொடுமை வழக்கு இல்லை என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.