முதல்வர் பதவியா?, திமுகவின் வீழ்ச்சியா? எது பெரிது?- விஜய்க்கு டிடிவி தினகரன் கேள்வி
Top Tamil News February 04, 2025 01:48 AM

முதல்வர் பதவியா, திமுகவின் வீழ்ச்சியா? எது பெரிது என எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விஜய் முடிவு செய்ய வேண்டும் என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.


முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செய்த பின்னர் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் ஒரு ஏடிஜிபி-யே புகார் கொடுக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கின் நிலை இருக்கிறது. 2004 முதல் 14 வரையிலான திமுக கூட்டணி காங்கிரஸ் ஆட்சியிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதும் இரண்டு, மூன்று ஆண்டுகள் தவிர்த்து தமிழ்நாடு என்ற பெயர் குறிப்பிடவில்லை. மத்திய பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான ஒன்று. திமுக ஆட்சியால் நிதியை சரியான முறையில் கையாள முடியாமல், முதலீடுகளை ஈர்க்க முடியாமல் போனதால் இதுபோன்ற புது புரளியை சில ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள். மோடியின் ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பொய்யான குற்றச்சாட்டு" என்றார்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நீங்கள் அழைக்கும் எடப்பாடி பழனிச்சாமி, விஜய் இருவரும் முதல்வர் வேட்பாளர்கள் எனில் கூட்டணி அமைவது எப்படி சாத்தியம்? என்ற கேள்விக்கு,
"திமுகவை வெல்லக்கூடிய ஆற்றல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மட்டுமே இருக்கிறது என்பதன் அடிப்படையில் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பொதுவான ஒரு அழைப்பை விடுத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் தனியாக நின்று வாக்குகளை வீணடிக்காமல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இது என்னுடைய விருப்பம் மட்டுமே.  சம்பந்தப்பட்ட கட்சிகள் தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும். தங்களுக்கு முதல்வர் பதவி பெரிதா? திமுக வீழ்த்தப்பட வேண்டுமா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.