திண்டுக்கல்லில் சாலையின் ஓரத்தில் இருந்த புளிய மரம் விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் ரவுண்டு ரோடு ராஜேந்திரா திரையரங்கம் அருகே சாலையில் ஓரத்தில் பழமையான புளியமரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தின் அடிப்பகுதி பட்டு போய் இருந்தது. இந்நிலையில் அந்தப் புளியமரம் இன்று 03.02.25 திடீரென சாலையில் சாய்ந்தது. அப்பொழுது அந்த அவ்வழியாக திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்த குணசேகரன் வயது46 சென்ட்ரிங் வேலை பார்ப்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். குணசேகரனை தொடர்ந்து பின்னால் சித்தப்பா சேவியர் தனது இரு சக்கர வாகனத்தில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரம் குணசேகரன் மீது விழுந்தது. இதில் மரத்துக்கு அடியில் சிக்கி குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறை வந்தனர் பின்னர் மரங்களை வெட்டி குணசேகரனின் உடலை மீட்டனர். பின்னர் குணசேகரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த குணசேகரனின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், மேலும் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே உள்ள திருச்சி சாலையில் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் மற்றும் திண்டுக்கல் மேற்கு தாசில்தார் ஜெயபிரகாஷ் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனை அடுத்து 30 நிமிட சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.