தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உடனடியாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் படகையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றிருக்கிறார்கள். இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவர்களின் அராஜகப் போக்கிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கைதால் மீனவ கிராமங்களிலும், மீனவர்கள் மத்தியிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுவதோடு மீனவர்கள் குடும்பங்கள் மத்தியில் ஒருவித அச்சமும் நிலவி வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து மீனவர்களின் கைதிற்கு கண்டனக்குரல் தொடர்ந்து எழுந்த போதும், ஒன்றிய அரசு அதைப் பற்றி சற்றும் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
கடந்த வாரம், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மீனவர்கள் கைதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகியிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உடனடியாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.