அடுத்தடுத்து ட்ரீட்:சிம்புவின் பிறந்தநாள் இன்று அவருடைய ரசிகர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்தநாள் அப்டேட் ஆக ரசிகர்களுக்கு நள்ளிரவு 12 மணி அளவில் டான் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அவருடைய 49 வது படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக பட நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
கல்லூரி மாணவனாக: இந்த படத்தில் சிம்பு கல்லூரி மாணவனாக நடிக்கக்கூடும் என அந்த போஸ்டரில் இருந்தே தெரிகிறது. இந்த நிலையில் இப்போது சிம்புவின் 51 வது பட அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிப்பதாக ஒரு செய்தி வெளியானது. அது சம்பந்தமான அறிவிப்பை தான் இன்று ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
வின்டேஜ் சிம்பு: இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கப் போகிறார். இந்தப் படத்தில் விண்டேஜ் லுக்கில் சிம்பு நடிப்பார் என்ற ஒரு பேச்சும் அடிபட்டு வருகிறது. அது சம்பந்தமான டீசரும் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. வல்லவன் திரைப்படத்தில் சிம்புவின் லுக் எப்படி இருந்ததோ அதே மாதிரியான ஒரு லுக்கில்தான் இந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஒரே நாளில் சிம்புவின் மூன்று படங்களின் அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக மாறி இருக்கிறது. ஏற்கனவே அவருடைய ஐம்பதாவது படத்தை சிம்பு தனது ஆத்மன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் தயாரிப்பதாக அறிவித்திருந்தார்.
களத்தில் இறங்கிய சிம்பு:அந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கப் போகிறார். ஏற்கனவே தேசிங்கு பெரியசாமி சிம்பு ஆகியோர் கூட்டணியில் உருவாகும் படத்தை மும்பை தொழிலதிபரான கண்ணன் ரவி தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட தானே தயாரிப்பதாக சிம்பு இறங்கி இருக்கிறார். இதன் மூலம் முதன் முறையாக ஒரு தயாரிப்பாளராக சிம்பு இந்த படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார்.
இவருடைய ஐம்பதாவது படத்தை பொருத்தவரைக்கும் ஒரு வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த படத்தை பற்றிய பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும் போதே தேசிங்கு பெரியசாமி மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை உருவாக்கப் போவதாக கூறியிருந்தார். அதனாலயே தயாரிப்பு நிறுவனங்கள் பல இந்த படத்தை தயாரிக்க யோசித்தார்கள்.
முக்கியமான படம்: ஆனால் இப்போது சிம்புவே இந்த படத்தை தயாரிக்க முன்வந்திருக்கிறார். அதற்கு காரணம் இந்த கதையின் மீது அவருக்கு மீது உள்ள நம்பிக்கைதான். அது மட்டுமல்ல கோடம்பாக்கத்திலும் இந்த கதையை தெரிந்த ஒரு சில பேர் சிம்பு மட்டும் இந்த படத்தில் நடித்தால் அவரை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்லும் படமாக இது இருக்கும் என கூறி வருகிறார்கள்.
அதனால் எப்படியாவது இந்த படத்தை எடுத்து முடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சிம்பு இருந்ததனால் தான் அவரே தயாரிக்க முன் வந்திருக்கிறார். இதற்கிடையில் அவருடைய 51 வது திரைப்படம் பற்றிய அறிவிப்பும் இப்போது வெளியாகி மேலும் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக மாறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.