மும்பையில் தாதர், பாந்த்ரா, மும்பை சென்ட்ரல், குர்லா மற்றும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் போன்ற இடங்களில் ரயில்வே டெர்மினஸ் இருக்கிறது.
இதில், பாந்த்ரா ரயில்வே டெர்மினஸில் நிறுத்தப்பட்டு இருந்த ரயிலில் உறங்கிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாந்த்ரா ரயில் நிலையத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தப்பட்திருந்த அந்த ரயிலில் 54 வயது பெண் உறங்கிக்கொண்டிருந்தார். இதை கவனித்த ராகுல் ஷேக் என்பவர், அப்பெண்ணை கட்டாயப்படுத்தி ரயிலின் கார்டு பெட்டிக்கு இழுத்துச்சென்று அங்கு வைத்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது மருமகனும் மும்பையை சுற்றிப்பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து மும்பைக்கு வந்துள்ளனர்.
அவர்கள் தங்குவதற்கு சரியான இடம் இல்லாத காரணத்தால் ஓரமாக நிறுத்தி இருந்த ரயிலில் ஏறிபடுத்துக்கொண்டனர். ரயில் நிலையத்தில் போர்டர் வேலை செய்து வந்த ராகுல் ஷேக் அவர்களை கவனித்துக் கொண்டிருந்தார். அவர்கள் ரயிலில் உறங்கியவுடன் மெதுவாக உள்ளே சென்று அப்பெண்ணை மிரட்டி அருகில் இருந்த ரயில்வே கார்டு பெட்டிக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீஸார் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் குற்றவாளியின் புகைப்படம் பதிவாகி இருந்தது.
சம்பவம் அதிகாலையில் 1.50 மணிக்கு நடந்திருந்தது. குற்றவாளி மீண்டும் காலை 5 மணிக்கு சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தார். அவரை மடக்கிப்பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டபெண் சொந்த ஊரில் மளிகை கடை நடத்தி வருகிறார். ரயில் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.