வின்ஃபாஸ்ட்: தமிழ்நாட்டைத் தேர்வு செய்தது ஏன்?
Vikatan February 04, 2025 02:48 AM

தூத்துக்குடியில் 400 ஏக்கர் பரப்பில் வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் என்கிற கார் தொழிற்சாலை வேகமாக நிறுவப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஆண்டு ஒன்றுக்கு ஐம்பதாயிரம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இது இருக்கும். வியட்நாம் தாண்டி, இந்தோனேஷியாவிலும் வின்ஃபாஸ்ட் இயங்கி வருகிறது. இந்த நாடுகள் தவிர ஐரோப்பிய நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளிலும் வின்ஃபாஸ்ட் தன் கார்களை விற்பனை செய்து வருகிறது.தமிழ்நாட்டில் ஏற்கெனவே கார், ட்ரக், பஸ், பைக், டிராக்டர் ஆகியவை துவங்கி இந்தக் கம்பெனிகளுக்குத் தேவையான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்பெனிகள் இயங்கி வருகின்றன.

2030ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் உற்பத்தியை மொத்த கார் உற்பத்தியில் 30 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன், இந்திய அரசு e30@30 என்ற முழக்கத்தை முன்வைத்துச் செயல்பட்டு வருகிறது. அந்த வகையிலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இருசக்கர மின்சார வாகனங்களில் 70 சதவிகிதம் நம் தமிழ்நாட்டில்தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மின்சாரக் கார்களின் உற்பத்தியிலும் நம் பங்கு 40 சதவிகிதமாக இருக்கிறது.

ஆக, எதிர்காலம் என்பது மின்சார வாகனங்கள் என்றாகிவிட்ட நிலையில், முழுக்க முழுக்க மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் இந்த வின்ஃபாஸ்ட் நம் தமிழ்நாட்டில் மின்சார கார்களைத் தயாரிக்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில், வின்ஃபாஸ்ட் ஆசியாவின் தலைவர் Pham Sanh Chau அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இருந்து... ‛‛உங்கள் கார் தொழிற்சாலையை அமைக்க இந்தியாவை, அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை, இன்னும் குறிப்பாகக் கேட்க வேண்டும் என்றால், தூத்துக்குடியை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ ‛‛உலகின் மூன்றாவது மிகப் பெரிய ஆட்டோமொபைல் மார்க்கெட் கொண்ட நாடு இந்தியா. இந்தியாவின் தொழிற்கொள்கைகள் சிறப்பாக இருப்பதால்... இதன் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறோம்.

முதலீட்டாளர்களை ஊக்குவிக்க இங்கு அரசு மானியமும் கொடுக்கிறார்கள். ஏன் தமிழ்நாடு என்று கேட்டால், தமிழ்நாட்டு மக்கள் அற்புதமானவர்கள். எங்களிடம் பணிபுரியும் பல பொறியாளர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இங்கே திறமை வாய்ந்த பொறியாளர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்தோம்.

‛‛வின்ஃபாஸ்ட்டிடம் VF 3 துவங்கி VF 9 வரை ஏராளமான மாடல்கள் இருந்தாலும், VF 6 மற்றும் VF 7 ஆகிய கார்களை இங்கே முதலில் அறிமுகப்படுத்த ஏன் தேர்வு செய்தீர்கள்?’’ ‛‛எங்களிடம் இருக்கும் கார்களை விலை ரீதியாகப் பட்டியலிட்டால் அதில் மேலிருந்து மூன்றாவதாக இருப்பது VF 7. வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் VF 6 மற்றும் VF 7 ஆகிய மாடல்கள் உட்பட மற்ற பிற மாடல்களும் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த மாடல்களை இந்தியாவில் இருக்கும் வாடிக்கையாளர்களும் விரும்புவார்கள். இந்த இரு மாடல்கள் மூலம் வின்ஃபாஸ்ட் கார்கள் இவர்களுக்குப் பழகிய உடன் VF 5, VF 3, VF 8 போன்ற மாடல்களையும் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்துவோம்.’’ ‛‛மின்சாரக் கார்கள் விற்பனையில் பேட்டரியின் பங்கு முக்கியமானது. இதில் வின்ஃபாஸ்ட்டுக்குச் சாதகமான சூழல் உள்ளதா?’’ ‛‛எங்களுக்குச் சொந்தமாக வியட்நாமில் பேட்டரி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இருக்கிறது. இன்னொருபுறம் சிறந்த பேட்டரிகளை உற்பத்தி செய்யும் மிகச் சிறந்த பேட்டரி உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்குகிறோம்.’’

‛‛இந்தியாவின் மின்சாரக் கார் சந்தையில் ஏற்கனவே நிறைய போட்டியாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இந்தச் சந்தைக்கு வின்ஃபாஸ்ட் தாமதமாக வந்திருப்பதாக நினைக்கிறீர்களா?’’ ‛‛இல்லை. இல்லவே இல்லை. நாங்கள் வளர்ச்சியடைவதற்கு இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மேலும் நாங்கள் இந்தியாவுக்கு ஓர் உயரிய இலக்கோடு வந்திருக்கிறோம். சுற்றுச்சூழலைச் சுத்தமானதாகவும் பசுமையானதாகவும் மாற்ற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்குத்தான் இங்கே வந்திருக்கிறோம்.

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களில் இயங்கும் கார்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் கார்களின் பயன்பாட்டை இந்த நாட்டில் அதிகப்படுத்துவதே எங்கள் முதன்மையான நோக்கம். இப்போது இருப்பதைவிட அனைத்து விதங்களிலும் மேம்பட்ட ஒரு உலகத்தை அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுத்தாக வேண்டும். இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.’’

‛‛பெயருக்கு ஏற்ப வின்ஃபாஸ்ட் என்பது மிக வேகமாகச் செயல்படும் நிறுவனமாக இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைக்க அடிக்கல் நாட்டினீர்கள். இன்னும் ஒரு சில மாதங்களில் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுமை அடைந்து விடும் என்று தெரிகிறது. பண்டிகைக் காலத்தின்போது உங்கள் கார்களின் விற்பனையே ஆரம்பித்துவிடும் என்று தெரிகிறது? உங்கள் செயல்பாடுகள் இத்தனை வேகமாக இருப்பதன் ரகசியம் என்ன?’’

‛‛எங்கள் வேகத்துக்குக் காரணம் - எங்கள் இலக்கிலும் எங்கள் செயல்பாட்டிலும் எங்களுக்கு ஆழமான நம்பிக்கை இருக்கிறது. நம்மைச் சுற்றியிருக்கும் காற்று சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை உடனடியாக அதிகப்படுத்த வேண்டும். அதனால்தான் விரைந்து செயல்படுகிறோம்!’’

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.