திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல தற்போது பக்தர்களுக்கும் காவல் துறை தடை விதித்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் மலை தங்களுக்கு தான் சொந்தம் என்று இந்து, இஸ்லாம் மதங்களைச் சேர்ந்தவர்கள் சமூக வலைத் தளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்று இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்க, காவல் துறை அனுமதி மறுத்தது. மேலும், மதுரை மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தத் தடை உத்தரவு இன்று இரவு 12 மணி வரை அமலில் இருக்கும் நிலையில், திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று வழிபட இன்று ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மலை மீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்காவிற்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதை வழியாக கோயிலுக்குச் செல்லக் கூடாது என்றும், படிக்கட்டு பாதையைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது 800-க்கும் மேற்பட்ட போலீசார் திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.