செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தின் படங்களை உருவாக்குதல், சேமித்தல் மற்றும் பகிர்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று இங்கிலாந்து உள்துறை செயலாளர் யெவெட் கூப்பர் அறிவித்துள்ளார். குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தைப் படம்பிடிக்க வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துவதை சட்டவிரோதமாக்கும் உலகின் முதல் நாடாக பிரிட்டன் இருக்கும் என்று உள்துறை செயலாளர் யெவெட் கூப்பர் அறிவித்துள்ளார். அதன்படி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
இது தொடர்பாக ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்படும். அதன்படி, AI மூலம் குழந்தைகள் புகைப்படத்தை வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி குழந்தைகளின் படங்களைத் தேடுவதும், அவர்களின் முகங்களை ஏற்கனவே உள்ள பாலியல் துஷ்பிரயோக படங்களில் ஒட்டுவதும் குற்றங்களாகக் கருதப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. குழந்தைகளின் போலி படங்கள் அவர்களை அச்சுறுத்த பயன்படுத்தப்படுகின்றன. "குற்றவாளிகளின் ஆன்லைன் செயல்பாடுகள் பெரும்பாலும் நிஜ வாழ்க்கையில் மிகவும் கொடூரமான குற்றங்களைச் செய்ய அவர்களைத் தூண்டுகின்றன" என்றும் யெவெட் கூப்பர் குறிப்பிட்டார்.
"குழந்தைகளை ஆன்லைனில் பாதுகாக்கவும், இந்த புதிய அச்சுறுத்தல்களுக்கு நமது சட்டங்கள் பதிலளிப்பதை உறுதி செய்யவும் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தயங்காது" என்று அவர் எச்சரித்தார். குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக படங்களைப் பகிரும் வலைத்தளங்களை நடத்துபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் இந்த மசோதா வழிவகுக்கும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500,000 குழந்தைகள் ஏதாவது ஒரு வகையான குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள் என்று இங்கிலாந்து அரசு கூறுகிறது.